பிரிட்டனின் தன்னிகரற்ற அரசியாக 70 ஆண்டு காலம் கோலோச்சி வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த இரண்டாம் எலிசபெத்தின் நல்லுடல் நேற்று வின்ட்சர் அரண்மனையில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. உலகத் தலைவர்கள், அரச குடும்பத்தினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் அரசியாருக்கு பிரியாவிடை கொடுத்தனர்.
பிரிட்டனில் 1965ஆம் ஆண்டு அந்நாட்டின் முன்னைய பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சிலுக்குப் பின்னர் முதல்முறையாக எலிசபெத் அரசியாருக்கு அரசாங்க இறுதி ஊர்வலச் சடங்கு நடைபெற்றது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று மாலை 5.44 மணிக்கு, வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஐந்து நாளாகக் கிடத்தப்பட்டிருந்த அரசியாரின் நல்லுடல், அருகில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்துக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்குதான் எலிசபெத் அரசியாரின் திருமணமும் முடிசூட்டு விழாவும் நடந்தது.
பிரிட்டிஷ் தேசிய கொடி போர்த்தப்பட்ட அரசியின் நல்லுடல் அரச கடற்படையின் பீரங்கி வாகனத்தில் வைக்கப்பட்டு 142 மாலுமிகளால் இழுத்துச் செல்லப்பட்டது.
அரசியாரின் நல்லுடல் வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்துக்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவரது மூத்த மகனும் புதிய அரசருமான சார்ல்ஸ் உள்ளிட்ட குடும்பத்தினர் உடன்நடந்தனர்.
தேவாலயத்தில் நடந்த இறுதிச் சடங்கில் அதிபர் ஹலிமா யாக்கோப் உள்ளிட்ட 2,000 பேர் கலந்துகொண்டனர்.
பிரிட்டனுக்கும் காமன்வெல்த் அமைப்புக்கும் வாழ்நாள் முழுவதும் சேவையாற்றப் போவதாக அரசியார் இளமையில் அளித்த வாக்குறுதியை தமது உரையில் நினைவு கூர்ந்த கேன்டர்பரி பேராயர் ஜஸ்டின் வெல்பி, அந்த வாக்கை மிகச் சிறப்புடன் அரசியார் நிறைவேற்றியதாகக் கூறினார். உலகம் அவருக்காகத் துயர்கொள்வதாக பேராயர் சொன்னார்.
அரசாங்க இறுதிச் சடங்கின் நிறைவைக் குறிக்க பியூகல் ஊதுகுழல் ஒலித்தது. மறைந்த அரசியாருக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், தேசிய கீதம் பாடப்பட்டது.
பிறகு அரசியாரின் நல்லுடல் தேவாலயத்திலிருந்து, பக்கிங்ஹெம் அரண்மனை உள்ளிட்ட லண்டனின் முக்கிய இடங்கள் வழியாக ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது. சுமார் 3,000 ராணுவத்தினர் ஊர்வலத்தில் நடந்துசென்றனர்.
ஊர்வலத்தில் வழி நெடுகிலும் காத்திருந்த மக்கள் மவுனமாக மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
இறுதியாக அரசியாரின் நல்லுடல் அவர் வசித்த வின்ட்சர் அரண்மனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்குள்ள தேவாலயத் தில் நடந்த தனிப்பட்ட இறுதிச் சடங்கிற்குப் பின்னர் அவரது கணவர் பிரின்ஸ் பிலிப்பின் சமாதியின் அருகே அரசியாரின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

