சூரிய எரிசக்தி, பசுமை ஹைட்ரோஜன் வாயு, நிதித் தொழில்நுட்பம், தகவல் தரவுகள் உள்ளிட்ட புதிய அம்சங்களில் ஒத்துழைப்பது பற்றி சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
நிதி அமைச்சருமான திரு வோங், இருநாட்டு ஒத்துழைப்பை அதிகரிக்கும் நோக்கில் இந்தியாவுக்கு ஐந்துநாள் பயணம் சென்றுள்ளார்.
தலைநகர் புதுடெல்லியில் திரு வோங், நேற்று இந்தியப் பிரதமரைச் சந்தித்தார். வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங்கும் இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் அப்போது உடனிருந்தார்.
அச்சந்திப்பு பற்றி தமது சமூக ஊடகப் பக்கங்களில் பதிவிட்ட திரு வோங், இந்தியா பல்வேறு துறைகளில் சிங்கப்பூரின் உத்திபூர்வ பங்காளி நாடு என்று குறிப்பிட்டார்.
கொவிட்-19 கிருமிப்பரவல் ஓய்ந்துவரும் வேளையில் இரு தரப்புத் தொடர்புகள் வேகம் எடுத்து அதிகரித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று துணைப் பிரதமர் கூறினார்.
இரு நாடுகளின் இளம் திறனாளர்களை ஊக்குவிக்க, சிங்கப்பூர்-இந்திய 'ஹேக்கத்தோன்' போட்டியை மீண்டும் தொடங்குவதை எதிர்ப்பார்த்துக் காத்திருப்பதாக திரு வோங் குறிப்பிட்டார். பெருந்தொற்றுக் காரணமாக அந்தப் போட்டி இரண்டு ஆண்டு களாக நடைபெறவில்லை.
கடந்த 2018ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் 'ஹேக்கத்தான்' போட்டி நடைபெற்றது.
இரு நாட்டு மாணவர்களைக் கொண்ட அணிகள், கல்வி, பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட கருப்பொருள்களில் மென் பொருள் திட்டங்களை உருவாக்கினர்.
சிங்கப்பூரும் இந்தியாவும் அணுக்கமான பொருளியல், அரசியல், கலாசார உறவைக் கொண்டுள்ளன. இந்தியாவுக்கும் ஆசியானுக்கும் இடையே மேலும் நெருக்கமான உறவை சிங்கப்பூர் ஊக்குவித்து வருகிறது.
தமது பயணத்தின் ஒரு பகுதி யாக திரு வோங் நேற்றுமுன்தினம் குஜராத் மாநிலத்துக்குச் சென்று அதன் முதலமைச்சர் பூபேந்திர பட்டேலைச் சந்தித்தார்.
குஜராத்துக்கும் சிங்கப்பூருக்கும் உள்ள அணுக்கமான உறவை சுட்டிக்காட்டிய திரு வோங், நிதித் தொழில்நுட்பம் போன்ற புதிய துறைகளில் இருதரப்பும் ஒத்துழைக்க வாய்ப்புள்ளது என்றார்.

