2024ஆம் ஆண்டு நடப்புக்கு வருகிறது
சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டு மத்தியில் கேன்கள், போத்தல்கள் ஆகியவற்றில் விற்கப்படும் பானங்களுக்கு, கூடுதலாக 10 அல்லது 20 காசு செலுத்தவேண்டி இருக்கும்.
பானங்களை அருந்திய பிறகு காலியான போத்தல்களையும் கேன்களையும் இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் சிறப்பு இயந்திரங்களில் சேர்ப்பித்தால் இந்தத் தொகையை மீண்டும் பெறலாம்.
தீவு முழுவதும் இதற்கான சிறப்பு இயந்திரப் பெட்டிகள் நிறுவப்படும். 200 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட பேரங்காடிகள் அனைத்திலும் இவை அமைக்கப்படும்.
சில இடங்களில், ஊழியர்களுடன்கூடிய முகப்புகளும் அமைக்கப்படும். இந்தத் திட்டம் அறிமுகம் ஆகும்போது 400க்கும் அதிகமான இத்தகைய இயந்திரங்கள் சேவை வழங்கும்.
கேன்கள், போத்தல்கள் ஆகியவற்றில் விற்கப்படும் 150 மில்லி லிட்டர் முதல் மூன்று லிட்டர் வரையிலான பானங்களுக்கு இது பொருந்தும்.
பானங்கள் விற்பனைக்காக நிரப்பப்படும் போத்தல்கள், கேன்கள் ஆகியவற்றின் மறுசுழற்சி விகிதத்தை 80 விழுக்காட்டுக்கு உயர்த்துவது இத்திட்டத்தின் இலக்கு.
தேசிய சுற்றுப்புற வாரியம் இந்தப் புதிய திட்டம் குறித்து நேற்று அறிவித்தது. இதன் தொடர்பிலான நிகழ்ச்சியில் நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணையமைச்சர் ஏமி கோர் கலந்துகொண்டார்.
இந்தத் திட்டத்தின் மூலம் சேகரிக்கப்படும் மறுசுழற்சிப் பொருள்களை விற்பனை செய்வதன் வாயிலாக, இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செலவை ஈடுகட்ட முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
வைப்புத் தொகையின் அளவு, மறுசுழற்சி முகப்புகள் அமைய வேண்டிய இடங்கள் போன்றவை குறித்துப் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
கருத்துரைக்க விரும்புவோர் அடுத்த மாதம் 14ஆம் தேதி வரை, அரசாங்கத்தின் கருத்தறியும் பிரிவான 'ரீச்'சின் இணையத் தளத்தை நாடலாம் என்று கூறப்பட்டது.

