மியன்மார் ராணுவம், நாட்டின் வடமேற்கு வட்டாரப் பள்ளி ஒன்றின்மீது நடத்திய ஆகாயத் தாக்குதலில் 11 மாணவர்கள் உயிரிழந்ததாக 'யூனிசெஃப்' எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவன சிறுவர் அறநிதி தெரிவித்துள்ளது. அந்த வட்டாரத்தில் பதுங்கியிருந்த கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து அந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக மியன்மாரின் ராணுவ ஆட்சித் தரப்பு கூறியது.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியது முதல் மியன்மாரில் குழப்பம் நிலவி வருகிறது. ராணுவம் மேற்கொண்ட ஒடுக்குமுறை நடவடிக்கைகளில் ஏறத்தாழ 2,300 பொதுமக்கள் உயிர் இழந்ததாக உள்ளூர் கண்காணிப்புக் குழு கூறியிருக்கிறது.
சகய்ங் வட்டாரத்தில் கிளர்ச்சியாளர்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே ஆகக் கடுமையான மோதல்கள் நடந்தன. இவற்றில் சில கிராமங்கள் முற்றிலுமாக எரிந்துபோயின.
இந்நிலையில், சென்ற வெள்ளிக்கிழமை டெபேயின் நகரப் பள்ளிமீது நடத்தப்பட்ட தாக்குதலை 'யூனிசெஃப்' வன்மையாகக் கண்டித்துள்ளது.
பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவை ஒருபோதும் தாக்குதலுக்கு இலக்காகக்கூடாது என்றும் அது வலியுறுத்தியுள்ளது. அதே பள்ளியைச் சேர்ந்த மேலும் 15 மாணவர்களைக் காணவில்லை என்றும் அது தெரிவித்துள்ளது.
சமூகக் குழுக்கள் பகிர்ந்துள்ள காணொளியில் ஒரு வகுப்பறையின் தரையில் ரத்தம் சிந்தியிருப்பதையும் அதன் கூரை சேதம் அடைந்திருப்பதையும் உயிர்நீத்த மகனின் சடலத்துடன் அழுதுகொண்டிருக்கும் தாயாரையும் காணமுடிகிறது.
அந்த வட்டாரத்தில் கிளர்ச்சித் தரப்பினர் ஆயுதங்களை இடம்மாற்றுவதாகத் துப்பு கிடைத்ததன்பேரில் ஹெலிகாப்டரில் துருப்பினரை அனுப்பியதை ராணுவ ஆட்சித் தரப்பு உறுதிப்படுத்தியது.
கிளர்ச்சியாளர்கள் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திக்கொண்டு சண்டையிடுவதாக அது குற்றம் சாட்டியது. தாக்குதல் நடந்த ஊரில் இருந்து வெடிபொருள்களைக் கைப்பற்றியதாகவும் அது தெரிவித்தது.
மோதல் இல்லாத இடங்களிலும் படையினர் தாக்குதல் நடத்துவதாகவும் வீடுகளுக்குத் தீ மூட்டு வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.
எங்கும் அச்சம் நிலவும் வேளையில், சில இடங்களில் கிராமத்து மக்கள் நாட்டு வெடிபொருள்களைப் பயன்படுத்தி, படையினருக்குச் சவால் விடுப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவ்வேளையில், மியன்மாரின் ஆளும் தரப்பினருடன் கலந்துரையாடி அங்கு நிலவும் அரசியல் நெருக்கடிக்கு ஆசியான் தீர்வுகாண வேண்டும் என்று மலேசிய வெளியுறவு அமைச்சர் சயிஃபுதீன் அப்துல்லா மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாட்டு நிறுவனப் பொதுச் சபைக் கூட்டத்திற்கிடையே மியன்மார் அமைச்சர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
மியன்மாரின் அரசியலமைப்புச் சட்டத்தை மீண்டும் வரையறுப்பது குறித்தும் அவர் பரிந்துரைத்தார்.
ஆசியான் தலைவர்கள் வரும் நவம்பர் மாதம் புனோம் பென்னில் சந்திக்கும்போது மியன்மார் அமைதித் திட்டம் குறித்து விவாதிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேறு புதிய திட்டம் குறித்து ஆய்வுசெய்ய வேண்டும் என்கிறது மலேசியா.

