இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கொவிட்-19 கிருமிப்பரவலை முன்னிட்டு 2020ஆம் ஆண்டு தொடங்கிய, 'பிரதமரின் ஏழைகள் நலன் உணவுத் திட்டத்தை' தொடர்வதா அல்லது கைவிடுவதா என்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும்.
உலகின் ஆகப் பெரிய உணவுப் பாதுகாப்புத் திட்டமாகக் கருதப்படும் இத்திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை 62 பில்லியன் வெள்ளி செலவிட்டுள்ளது.
இந்த உதவித் திட்டத்தின்கீழ், 800 மில்லியன் இந்தியர்களுக்கு மாதந்தோறும் ஐந்து கிலோகிராம் அரிசி அல்லது ஐந்து கிலோகிராம் கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த மாத இறுதியுடன் இத்திட்டம் முடிவுக்கு வரும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மத்திய நிதியமைச்சு இதனை மேலும் நீட்டிப்பதை ஆதரிக்கவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
இறுதி முடிவு பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில்தான் உள்ளது. மேலும் மூன்று மாதங்களுக்கு இலவசத் திட்டங்களைத் தொடர அவர் முடிவெடுக்கக்கூடும் என்று கூறிய கவனிப்பாளர்கள், பண்டிகைக் காலம், மாநிலத் தேர்தல்கள் போன்றவற்றைக் கருத்தில்கொண்டு அவர் அவ்வாறு முடிவெடுப்பார் என்று குறிப்பிட்டனர்.
அதிகமான வேலையின்மை விகிதம், வருமான இடைவெளி, அரசியல் பிரிவினை எனப் பல்வேறு சிரமங்களை அரசு எதிர்கொண்டுவரும் நிலையில் திரு மோடி இக்கட்டான சூழலை எதிர் நோக்குகிறார்.
இலவச உணவுத் திட்டத்தை நிறுத்துவது அவருக்கு எளிதான முடிவாக இருக்காது. பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்திலும் இமாச்சலப் பிரதேசத்திலும் ஆட்சி உரிமையைத் தக்கவைத்துக் கொள்ளத் திட்டமிடுகிறது ஆளும் பாரதிய ஜனதா கட்சி.
இந்த ஆண்டு இறுதியில் அந்த இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.
தற்போது இலவச உணவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தால் வாக்காளர்கள் யாருக்கு வாக்களிப்பது என்று முடிவெடுப்பதில் அது கட்டாயம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் கவனிப்பாளர்கள்.
இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற உத்தரப் பிரதேச மாநிலச் சட்டமன்றத் தேர்தலில், இலவச உணவுத் திட்டத்தால் பலனடைந்த கணிசமான வாக்காளர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
இந்தத் திட்டம் பலத்த வரவேற்பைப் பெற்றாலும் அதை மேலும் தொடர்ந்தால் அரசாங்கத்திற்கு மிக அதிக செலவு என்பதுடன் மலிவான விலையில் கிடைக்கும் தானியங்களுக்கான தேவை அதிகரிக்கும் என்பதையும் கவனிப்பாளர்கள் சுட்டினர்.
வறட்சியால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா ஏற்கெனவே கோதுமை, அரிசி ஆகியவற்றின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதித்துள்ளது.
மேலும் ஆறு மாதங்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை நீட்டிப்பதற்கு அரசாங்கம் 12.4 பில்லியன் வெள்ளிக்கும் மேல் நிதி ஒதுக்க வேண்டியிருக்கும்.