இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யா முதன்முறையாக கூடுதல் ராணுவப் படைகளைத் திரட்ட முடிவெடுத்துள்ளது. அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டின் இதை நேற்று அறிவித்தார்.
அணுவாயுதம் தொடர்பில் மேற்கத்திய நாடுகள் பயம் காட்டி மிரட்டினால் மாஸ்கோ தனது மொத்த ஆயுத பலத்தைக்கொண்டு பதிலடி கொடுக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.
கூடுதல் படைகளைத் திரட்டும் நடவடிக்கையின்கீழ் போரில் ஈடுபடாதிருந்த 300,000 பேர் செயல்படுத்தப்படுவர். ராணுவ அனுபவம் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று ரஷ்ய தற்காப்பு அமைச்சர் செர்ஹெய் ஷோய்கு தெரிவித்தார்.
மாணவர்களும் கட்டாய ராணுவ சேவையாற்றுவோரும் போரில் ஈடுபடுத்தப்படமாட்டார்கள் என்று திரு ஷோய்கு கூறினார். போரில் ஈடுபடாதிருந்த பெரும்பாலோர் பாதிக்கப்படமாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 6,000 ரஷ்ய ராணுவ வீரர்கள் மாண்டுவிட்டதாக திரு ஷோய்கு தெரிவித்தார்.
மாஸ்கோ பொதுவாக போரில் இழந்த வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடாது. அந்த வகையில் திரு ஷோய்கு மாண்ட வீரர்களின் எண்ணிக்கையைத் தெரிவித்தது சற்று ஆச்சரியம் தரும் நிகழ்வாகக் கருதப்படுகிறது.
ரஷ்யா உக்ரேனுக்கு எதிராகப் போரிடுகிறது என்பதைவிட ஒட்டுமொத்த மேற்கத்திய உலகிற்கு எதிராகப் போரிடுவதாகச் சொல்லலாம் என்று திரு ஷோய்கு சொன்னார். கூடுதல் ராணுவப் படைகளைத் திரட்டும் திரு புட்டினின் முயற்சியைப் போர் ரஷ்யாவுக்கு சாதகமாகப் போகவில்லை என்பதற்கான அறிகுறியாக சில தரப்பினர் கருதுகின்றனர்.

