பயங்கரவாத நடவடிக்கைகளுக்குத் துணைபோவோரைக் கண்டறியும் முயற்சியாக நேற்று முன்தினம் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேசிய புலனாய்வு முகவையைச் (என்ஐஏ) சேர்ந்த அதிகாரிகள் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.
ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 'பாப்புலர் ஃபிரண்ட் ஆஃப் இந்தியா' (பிஎஃப்ஐ) என்னும் அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டனர். கைதான 106 பேரில் கேரள மாநிலத்தில் ஆக அதிகமாக 22 பேர் பிடிபட்டனர்.
இந்நிலையில், தங்கள் அமைப்பினர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் தேசிய புலனாய்வு முகவை சோதனை நடத்தியதைக் கண்டித்தும் கேரள மாநிலத்தில் நேற்று கடையடைப்புப் போராட்டத்திற்கு பிஎஃப்ஐ அழைப்பு விடுத்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நேற்றுக் காலை முதல் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதேநேரம் பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் ஓடிய அரசுப் பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஆட்டோ ரிக்ஷா போன்ற இதர வாகனங்களையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தினர். அவர்களைத் தடுத்த காவல்துறையினர் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் பல காவல்துறை அதிகாரிகள் காயமடைந்தனர்.
இச்செயல்களைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் நேற்று பதற்றம் நிலவியது.
கேரள உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வன்முறைச் செயல்கள் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. முன் அனுமதி பெறாமல் எந்த ஒரு போராட்டத்தையும் நடத்தக்கூடாது என்று நீதிமன்றம் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தது.
முன்னதாக, தமிழகத்தில் வியாழக்கிழமை இரவு சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தினர்.
கோவையில் பாஜக அலுவலகம் மீதும் பொள்ளாச்சியில் பாஜக மற்றும் இந்து முன்னணியைச் சேர்ந்த நிர்வாகிகளின் வீடுகள் மீதும் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கப்பட்டதாகக் கூறிய மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இச்செயல்
களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.
"பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்துவதன் மூலம் எங்களது துணிச்சல் குறைந்துவிடாது," என்று அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்தார்.