மலேசியாவில் தற்போது நடப்பில் இருக்கும் கொவிட்-19 கட்டுப்பாடுகளில் இவ்வாண்டு இறுதிவரை மாற்றங்கள் செய்யப்படாது என்று அந்நாட்டின் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீன் தெரிவித்து உள்ளார்.
கொவிட்-19 கிருமி தொற்றியோர் ஏழு நாள்கள் இல்லத்தனிமையில் இருக்கவேண்டும் என்பது தற்போதுள்ள விதி. இருப்பினும், நான்காவது நாளில் தொற்று விலகினால் கட்டுப்பாட்டு விதியும் விலகும்.
"கொள்ளைநோயை நாம் கட்டுக்குள் வைத்திருப்பதற்கு, தனிமைப்
படுத்துதல் விதிகளை பொதுமக்கள் கடைப்பிடிப்பதும் ஒரு காரணம். ஒரு
வருக்கு கொவிட்-19 நோய் தொற்றிவிட்டால் அவர் ஏழு நாள்கள் தனிமையில் இருக்கவேண்டும். நான்காவது நாளில் தொற்று இல்லாவிட்டால் அவர் வெளியே வரலாம்.
"தற்போது தொற்றுநோய் தொடர்பான சட்டவிதி 342 நடப்பில் இல்லை என்பதால் இந்தக் கட்டுப்பாடுகளை ஆண்டிறுதிவரை கடைப்பிடிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது," என்றார் திரு கைரி.
தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுச் சட்டம் 1988 (சட்டம் 342) என்பதை அவர் குறிப்பிட்டுப் பேசினார். கொவிட்-19 தொடர்பான நடமாட்டக் கட்டுப்பாடு ஆணைகள் போன்ற முடக்கநிலையையும் ஒழுங்குவிதிகளையும் விதிக்க இந்தச் சட்டத்தில் இடமுண்டு.
இதனை மீறுவோருக்கு 1,000 ரிங்கிட் (S$310) வரையிலான அபராதமும் ஆறு மாதங்கள் வரையிலான சிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம்.
வேலைக்குச் செல்வதைத் தவிர்க்கும் நோக்கில், தமக்கு கொவிட்-19 கிருமி தொற்றியதாகக் கூறும் ஊழியர்களின் நேர்மையற்ற போக்கு பற்றி அமைச்சரிடம் கேட்கப்பட்டதற்கு, இது ஒரு பெரிய விவகாரம் அல்ல என்றார் அவர்.
"இதனால் இங்குள்ள முதலாளிகள் பெரிதாகக் கவலைப்படுவார்கள் என்று நான் கருதவில்லை.
"கொள்ளைநோயுடன் வாழும் உருமாற்றத்தை நோக்கி நகரத் தொடங்கி விட்ட நிலையில் இதுபோன்ற விவகாரங்களை தனிப்பட்டவர்களின் பொறுப்புக்கும் சமூக ஒற்றுமைக்கும் விட்டுவிடலாம்.
"கொவிட்-19 தொடர்பான தகவல்களை வெளியிடுவதில் நாம் உண்மையாக இருக்கிறோமா இல்லையா என்பது நமது ஒற்றுமை சார்ந்த அம்சம்," என்றார் திரு கைரி.
முன்னதாக, தாமாக முன்வந்து ஆண்டுதோறும் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முறை மலேசியாவில் அறிவிக்கப்படலாம் என்று அவர் வெள்ளிக்கிழமை கூறியிருந்தார்.
அபாயம் நீங்கவில்லை: உலக நிறுவனம்
கொவிட்-19 அபாயம் நீங்கிவிட்டதாக பணக்கார நாடுகள் கருதினால் அந்த நிலையை வசதியற்ற நாடுகளும் எட்ட அவை உதவ வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த அதிகாரி புரூஸ் ஐல்வார்ட், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.
கொவிட்-19 என்பது இப்போது உலகளவிலான பிரச்சினை என்பதால் இதனைச் சமாளிப்பதில் இருந்து வசதி படைத்த நாடுகள் பின்வாங்கிவிடக்கூடாது என்றும் இனி வரும் காலத்திலும் தொற்று பரவுவதற்கான சாத்தியம் இருக்கிறது என்றும் நேர்காணல் ஒன்றில் அவர் தெரிவித்தார்.

