இவ்வாண்டின் முற்பாதியில் தனியார் வாடகைக்காக 4,337 புதிய கார்கள் பதிவு செய்யப்பட்டன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்புநோக்க இது 25.4 விழுக்காடு அதிகம்.
இவ்வாண்டின் முற்பாதியில் புதிய கார் பதிவுகள் 16,640ஆக இருந்தன. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இது 35.2 விழுக்காடு குறைவு.
புதிய வாடகை கார்களின் பதிவுகள் அதிகரித்து இருப்பதற்கு வாடகை கார் நிறுவனங்கள் அதிக பங்கு வகிப்பதாக தொழில்துறை கவனிப்பாளர்கள் கூறுகின்றனர். அண்மைக் காலத்தில் வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணங்கள் அதிகரித்து இருப்பதற்கு இது ஒரு முக்கிய காரணம்.
வாடகை கார்களில் கிராப், கோஜெக் போன்ற சேவைகளை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 8.4 விழுக்காடு கூடியது. சொந்த பயன்பாட்டிற்கு அல்லது கார் பகிர்வுச் சேவைகளுக்காக பதிவு செய்யப்பட்ட கார்களின் எண்ணிக்கை 46 விழுக்காட்டிற்குமேல் அதிகரித்தது.
கூடுதலானோர் சொந்த வாகனங்களை வாங்குவதற்குப் பதிலாக வாடகைக்கு கார்களை எடுப்பர் என எதிர்பார்க்கப்படுவதால் கார் நிறுவனங்கள் தங்களிடம் இருப்பில் உள்ள கார்களின் எண்ணிக்கையை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது.
இவ்வாண்டு ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை 'புளூஎஸ்ஜி' நிறுவனம் 109 புதிய கார்களைப் பதிவு செய்தது. கடந்த ஆண்டிறுதியில் அந்நிறுவனத்திடம் ஏற்கெனவே 693 கார்கள் இருந்தன.
கடந்த ஆண்டு பிப்ரவரியில் 400 கார்களுடன் செயல்பாடுகளைத் தொடங்கிய 'கெட்கோ' நிறுவனமும் வேகமாக வளர்ந்து வருகிறது. அந்நிறுவனத்திடம் தற்போது 1,500 கார்கள் உள்ளன.
இந்த கார்கள் 'கெட்கோ'வுக்கு சொந்தமானவை அல்ல. மாறாக, 10க்கும் அதிகமான கார் உரிமையாளர்கள் இந்நிறுவனத்துக்கு கார்களை வழங்குகின்றனர்.
இவ்வாண்டு ஜூன் நிலவரப்படி, வாடகை கார்களின் எண்ணிக்கை 24,442ஆக இருந்தது. ஒப்புநோக்க கடந்த ஆண்டின் இதே மாதத்தில் இந்த எண்ணிக்கை 21,897ஆக இருந்தது.
ஆனால், கார் பகிர்வுச் சேவைகள் என வரும்போது, கார்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில் நிலவரம் வேறு. 2017ல் 46,903 என உச்சம் தொட்ட இந்த எண்ணிக்கை, கடந்த ஜூன் மாதம் 44,450ஆகக் குறைந்தது.
போக்குவரத்து அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட எழுதுபூர்வ பதிலில், 2020ஆம் ஆண்டு ஜனவரியுடன் ஒப்புநோக்க, இவ்வாண்டு ஜூன் மாத நிலவரப்படி டாக்சி, தனியார் வாடகை கார் ஓட்டுநர்களின் எண்ணிக்கை 18 விழுக்காடு குறைந்ததாகத் தெரிவித்து இருந்தார்.

