பிலிப்பீன்சில் மூன்றாம் நிலை புயல்காற்று தொடர்ந்து வலுவடைந்ததை முன்னிட்டு, கரையோரப் பகுதிகளில் இருந்து நேற்று மக்களை அதிகாரிகள் வெளியேற்றினர்.
தலைநகர் மணிலா உட்பட லிஸோன் தீவு புயல்காற்றுக்குத் தயாராகி வந்த வேளையில், நூற்றுக்கணக்கானோரால் நேற்று கடல்வழிப் பயணம் மேற்கொள்ள முடியவில்லை என்று அதிகாரிகள் கூறினர்.
மணிக்கு 185 கி.மீ. முதல் 205 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து தீவிரம் அடைந்த 'நோரு' புயல், உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு குவேஸோன் மாநிலத்தின் பொலில்லோ தீவுகளின் புர்டியோஸ் நகராட்சியில் கரையைக் கடந்தது.
'நோரு' புயல் கரையைக் கடக்கவிருந்தபோது அதன் வேகம் தீவிரம் அடைந்தது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என்று வானிலை முன்னுரைப்பு நிறுவனம் கூறியது. காற்றின் வேகம் 24 மணி நேரத்தில் 90 கி.மீ. அதிகரித்ததாக அது சொன்னது.
மணிலாவில் அவசரகாலப் பணியாளர்கள் வலுவான காற்று வீசுவதற்கும் கனமழை பெய்வதற்கும் தங்களைத் தயார்ப்படுத்திக்கொண்டனர்.
அந்நகரில் அபாயம் மிகுந்த சில பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக மக்களை வெளியேற்றும் பணிகள் தொடங்கியதாக அதிகாரிகள் கூறினர்.
கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
நிலச்சரிவுகள், வெள்ளம், சேதத்தை ஏற்படுத்தவல்ல காற்றுக்கு அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக பேரிடர்களைச் சமாளிக்கும் அமைப்பின் பேச்சாளர் பெர்னார்டோ ரஃபாயிலிட்டோ அலெஜாண்ட்ரோ சொன்னார்.
இவ்வாண்டு பிலிப்பீன்ஸ் எதிர்கொள்ளும் 11வது புயலாக 'நோரு' உள்ளது.

