சிங்கப்பூர் மக்கள்தொகை 5.64 மில்லியன்

சிங்கப்பூர் மக்கள்தொகை 5.64 மில்லியன்

3 mins read

ஈராண்டுச் சரிவிற்குப் பிறகு 3.4% ஏற்றம்

சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை கடந்த ஓராண்­டில் 3.4% கூடி, இவ்­வாண்டு ஜூன் மாதத்­தில் 5.64 மில்­லி­யனை எட்­டி­யது.

கொவிட்-19 பர­வ­லுக்­கு­முன் கடந்த 2019ஆம் ஆண்­டில் 5.7 மில்­லி­யனை எட்­டிய மக்­கள்­தொகை, அடுத்த ஈராண்­டு­களில் சரி­வைச் சந்­தித்­தது.

நேற்று வெளி­யி­டப்­பட்ட அர­சாங்­கத்­தின் வரு­டாந்­திர மக்­கள்­தொகை அறிக்­கை­யில் இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் இடம்­பெற்­றுள்­ளன.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­களும் பய­ணக் கட்­டுப்­பா­டு­களும் தளர்த்­தப்­பட்­டதை அடுத்து, குடி­மக்­களும் நிரந்­த­ர­வா­சி­களும் வெளி­நா­டு­களிலிருந்து சிங்­கப்­பூர் திரும்பு­வது எளி­தா­னது; வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­க­வும் அது வழி­வ­குத்­தது.

திருமணங்கள் கூடின

முந்­திய ஈராண்­டு­க­ளைக் காட்­டி­லும் 2021ஆம் ஆண்­டில் அதி­க­மான சிங்­கப்­பூ­ரர்­கள் திரு­ம­ணம் செய்­து­கொண்­ட­னர். 2019ஆம் ஆண்­டில் 22,165ஆக­வும் 2020ஆம் ஆண்­டில் 19,430ஆக­வும் பதிவான திரு­மணங்­க­ளின் எண்­ணிக்கை, 2021ஆம் ஆண்­டில் 23,433ஆக உயர்ந்­தது.

2021ஆம் ஆண்­டில் 31,713 சிங்­கப்­பூர் குழந்­தை­கள் பிறந்­தன. இது முந்­திய ஆண்­டைக் காட்­டி­லும் சற்றே குறைவு. 2020ஆம் ஆண்­டில் பிறந்த சிங்­கப்­பூர் குழந்­தை­களின் எண்­ணிக்கை 31,816.

2020ல் ஒரு பெண்ணுக்கு 1.1 குழந்தை என ஆக மோச­மாக இருந்த குடி­மக்­கள் மொத்த கரு­வு­று­தல் விகி­தம், 2021ல் 1.12 என்று சற்றே மேம்­பட்­டது. 2019ஆம் ஆண்­டில் இவ்­வி­கி­தம் 1.14ஆக இருந்­தது.

கொரோனா கட்­டுப்­பா­டு­கள் தளர்­வு மக்­கள்­தொ­கை­யை­யும் திரு­ம­ணங்­க­ளை­யும் அதி­க­ரிக்க உத­வி­னா­லும் மொத்த கரு­வு­று­தல் விகி­தம், மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை போன்ற நீண்­ட­கா­லப் பிரச்­சி­னை­கள் நீடிக்­கின்­றன.

கடந்த சில பத்­தாண்­டு­க­ளா­கவே மொத்த கரு­வு­று­தல் விகி­தம் குறைந்து வரு­வ­தாக அறிக்கை குறிப்­பி­டு­கிறது. ஒற்­றை­யர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வ­தும் சற்று வய­தா­ன­பின் திருமணம் ­பு­ரி­வோர் குறை­வா­கக் குழந்தை பெற்­றுக்­கொள்­வ­துமே அதற்கு முக்­கி­யக் கார­ணங்­க­ளா­கக் கூறப்­ப­டு­கின்றன.

2017 முதல் 2021 வரை சரா­ச­ரி­யாக ஆண்­டுக்கு 32,200 சிங்­கப்­பூர் குழந்­தை­கள் பிறந்­தன. 2012-2016 கால­கட்­டத்­தில் இச்சரா­சரி 32,900ஆக இருந்­தது.

கொவிட்-19 தொற்­றுப் பர­வ­லால் திருமணங்­கள் தாம­த­மா­ன­தா­லும் குழந்தை பெற்­றுக்­கொள்­ளும் திட்­டங்­க­ளைத் தள்­ளிப்­போட்­ட­தா­லும் 2020, 2021ஆம் ஆண்டு­களில் குழந்­தைப் பிறப்பு குறைந்­த­தாக அறிக்கை குறிப்பிட்டது.

மூப்படைவது தொடர்ந்து அதிகரிப்பு

மூப்­ப­டை­யும் சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் தொடர்ந்து அதி­க­ரித்து வரு­கிறது. இப்­போது 65 மற்றும் அதற்­குமேல் வயதுடைய சிங்­கப்­பூ­ரர்­க­ளின் விகி­தம் 18.4 விழுக்­கா­டாக உள்­ளது. இவ்­வி­கி­தம் 2021ல் 17.6 விழுக்­கா­டா­க­வும் 2012ல் 11.1 விழுக்­கா­டா­க­வும் இருந்­தது.

வரும் 2030ஆம் ஆண்­டில் 23.8% சிங்­கப்­பூ­ரர்­கள், அதா­வது கிட்­டத்­தட்ட நால்­வரில் ஒரு­வர் 65 மற்­றும் அதற்­கு­மேல் வய­து­டை­ய­வ­ராக இருப்பார். கடந்த பத்­தாண்­டுகளைவிட மூப்­ப­டை­யும் சிங்­கப்­பூரர்­க­ளின் விகி­தம் விரை­வாக உயர்ந்து வரு­கிறது என்று அறிக்கை கூறு­கிறது.

சிங்­கப்­பூ­ரர்­க­ளை­யும் நிரந்­த­ர­வா­சி­க­ளை­யும் உள்­ள­டக்­கிய உள்­ளூர்­வாசி மக்­கள்­தொகை அதி­க­ரித்­துள்­ளது.

2021 ஜூன் மாதம் 3.5 மில்­லி­ய­னாக இருந்த சிங்­கப்­பூ­ரர்­க­ளின் எண்­ணிக்கை இவ்­வாண்டு ஜூனில் 3.55 மில்­லி­ய­னாக உயர்ந்­தது. இது 1.6% வளர்ச்சி. இதே கால­கட்­டத்­தில் நிரந்­த­ர­வா­சி­க­ளின் எண்­ணிக்கை 6.3%, அதா­வது 0.49 மில்­லி­யனில் இருந்து 0.52 மில்­லி­ய­னாக அதி­கரித்­தது.

2022 ஜூன் நில­வ­ரப்­படி, உள்­ளூர்­வாசி­கள் அல்­லாத 1.56 மில்­லி­யன் பேர் சிங்­கப்­பூ­ரில் வசிக்­கின்­ற­னர். இது 2021ஐக் காட்­டி­லும் 6.6% அதி­கம். 2019ஆம் ஆண்­டில் உள்­ளூர்­வா­சி­கள் அல்­லா­தோ­ர் எண்­ணிக்கை 1.68 மில்­லி­ய­னாக இருந்­தது.

வெளி­நாட்­டி­னர் வேலைக்கு வந்­துள்­ளது அதி­க­ரித்­திருப்பதே இந்த உயர்­விற்­குக் கார­ணம். குறிப்­பாக, கட்­டு­மா­னம், கப்­பல் பட்­டறை, செய்­மு­றைத் தொழில்­துறை ஆகிய துறை­க­ளைச் சேர்ந்த வேலை அனு­ம­திச்­சீட்டு ஊழி­யர்­களே இந்த உயர்­விற்­குப் பெரி­தும் கார­ணம்.

கடந்த 2020ஆம் ஆண்­டில் 5.69 மில்லி­யனாக இருந்த சிங்­கப்­பூர் மக்­கள்­தொகை 2021ல் 5.45 மில்லியனாகக் குறைந்­தது. இந்த 4.1% சரிவே, 1950ஆம் ஆண்­டிற்­குப் பிறகு ஆண்டு அடிப்­ப­டை­யில் ஏற்­பட்ட ஆகப் பெரிய சரிவு.

சென்ற ஆண்டு 21,537 பேருக்­குக் குடி­யு­ரி­மை­யும் 33,435 பேருக்கு நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் வழங்­கப்­பட்­டன. இது, 2020ஆம் ஆண்­டை­விட அதி­கம். அவ்­வாண்­டில் 21,085 பேருக்­குக் குடி­யு­ரி­மை­யும் 27,470 பேருக்கு நிரந்­த­ர­வா­சத் தகு­தி­யும் வழங்­கப்­பட்­டன.