தனது ஆக்கிரமிப்பிலுள்ள உக்ரேனியப் பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பில் நாளை மறுநாள் 30ஆம் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
லுகான்ஸ்க், டொனட்ஸ்க், ஸப்பொரிஸியா, கெர்சன் ஆகிய அந்த நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது தொடர்பில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பு நேற்றுடன் நிறைவுபெற்றதாகக் கூறப்பட்டது.
"அப்பகுதிகளை ரஷ்யாவுடன் இணைப்பது உக்ரேன் மீதான சிறப்பு ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதாகவும் அது சண்டைக்கு எதிரான நாட்டுப்பற்றை வளர்ப்பதாகவும் இருக்கும் என்று ரஷ்யத் தலைவர்கள் நம்பக்கூடும்," என்று பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சு டுவிட்டர் வழியாகத் தெரிவித்தது.
இதனிடையே, ரஷ்ய ஆதரவுடன் கூடிய பொது வாக்கெடுப்புக்கு உதவும் உக்ரேனியர்கள் தேச துரோகக் குற்றச்சாட்டை எதிர்கொள்வர் என்றும் குற்றம் மெய்ப்பிக்கப்பட்டால் அவர்களுக்குக் குறைந்தது ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் உக்ரேனிய அதிபரின் ஆலோசகர் மிக்காய்லோ போடோலயக் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய ஆதரவுடனான பொது வாக்கெடுப்புடன் தொடர்புடையவர்களின் பெயர்ப் பட்டியல் தங்களிடம் உள்ளது என்று சுவிஸ் நாளிதழான 'பிலிக்'கிற்கு அளித்த நேர்காணலின்போது திரு மிக்காய்லோ கூறினார்.
அதே வேளையில், கட்டாயத்தின்பேரில் வாக்களித்த உக்ரேனியர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரஷ்ய ஆதரவுப் படையின் துணையுடன் வாக்குப்பெட்டிகள் வீடு வீடாக எடுத்துச் செல்லப்பட்டு, வாக்களிக்கும்படி குடியிருப்பாளர்கள் கட்டாயப்படுத்தப்படுவதாக உக்ரேனிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, உக்ரேனின் பல பகுதிகளில் அந்நாட்டுப் படையினருக்கும் ரஷ்யப் படையினருக்கும் இடையே நேற்று கடும் சண்டை இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கெர்சனில் தாங்கள் நடத்திய எதிர்த்தாக்குதலில் ரஷ்யப் படை வீரர்கள் 77 பேர் கொல்லப்பட்டனர் என்றும் ஆறு பீரங்கிகளும் 14 கவச வாகனங்களும் அழிக்கப்பட்டன என்றும் உக்ரேனிய ஆயுதப்படை தெரிவித்தது.

