ஊழியர் மனநலனைக் காப்பதற்கு மேலும் அதிகமான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாட்டு நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. வேலையிடத்தில் ஏற்படக்கூடிய உளவியல் அழுத்தங்களைக் குறைப்பதற்கான புதிய வழிகாட்டுதல்களையும் நிறுவனம் முன்வைத்தது.
சுகாதாரம், தொழில் ஆகிய அம்சங்கள் தொடர்பில் ஐக்கிய நாட்டு நிறுவன அமைப்புகள் வெளியிட்ட இரண்டு அறிக்கைகளில் இது தொடர்பான அறிவுறுத்தல்கள் இடம்பெற்றிருந்தன.
வேலையிடத்தில் மனநல அபாயங்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் அவற்றுக்கு எதிராகப் பாதுகாப்பதற்கும் ஏற்ப அறிவுறுத்தல்கள் அமைந்திருந்தன.
உளவியல் பாதிப்புக்கு உள்ளாகும் தனிமனிதனாலும் சமுதாயத்தாலும் ஒரேவிதமான செலவுகள் நேரும் என்று எச்சரிக்கப்படுகிறது.
மனச்சோர்வாலும் கவலையாலும் ஆண்டுக்கு சுமார் 12 பில்லியன் வேலை நாள்கள் இழக்கப்படுகின்றன. இதனால் அனைத்துலக பொருளியலுக்குக் கிட்டத்தட்ட $1 டிரில்லியன் அமெரிக்க டாலர் (S$1.45 டிரில்லியன்) செலவு நேர்வதாக உலக சுகாதார நிறுவனமும் அனைத்துலக ஊழியர் அமைப்பும் கூறியுள்ளன.
"வேலையால் நம் மனநலனுக்குத் தீங்கு விளைவிக்கக்கூடிய தாக்கம் மீது கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது," என்று உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கேப்ரியேசுஸ் கூறியுள்ளார்.

