சிங்கப்பூரர்கள் உணவில் அளவுக்கு அதிகமாக உப்பு சேர்த்துக்கொள்கிறார்கள். எனவே, அதைக் குறைக்க வேண்டும் என்று சுகாதார மேம்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மக்கள் உட்கொள்ளும் சோடியத்தின் அளவை சுமார் 15 விழுக்காடு குறைக்க வாரியம் திட்டமிட்டு வருகிறது.
சிங்கப்பூரர்கள் அன்றாடம் தாங்கள் உட்கொள்ளும் சோடியத்துக்கான மாற்றுப்பொருள்களை நாட வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இந்த மாற்றுவழிகளே ஆரோக்கிய வாழ்க்கைமுறைக்கு உகந்தவை என்கிறது வாரியம். இதுபோன்ற மாற்றுப் பொருள்கள் கட்டுப்படியான விலையில் கிடைப்பதற்காக சில்லறை வர்த்தக நிறுவனங்களுடன் வாரியம் இணைந்து செயல்படவும் உள்ளது.
இதற்கிடையே, சோடியம் குறைவாக உள்ள சுவைச்சாறு (sauce) மற்றும் சுவையூட்டி (seasoning) வகைகள் கடைகளில் பலதரப்பட்டதாக இருப்பதை வாரியம் உறுதிசெய்யும். அத்துடன், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு இயக்கம் ஒன்றையும் அது தொடங்க உள்ளது. தேசிய அளவில் சோடியத்தைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த உத்திபூர்வ அணுகுமுறை தொடர்பான விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த அணுகுமுறை குறித்து முதன்முதலில் மார்ச் மாதம் நடந்த வரவுசெலவுத் திட்ட விவாதத்தின்போது குறிப்பிடப்பட்டது.
கடந்த பல ஆண்டுகளாக சிங்கப்பூரர்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துவிட்டது. சராசரியாக ஒரு நாளில் சுமார் 3,300 மில்லிகிராம் உப்பை ஒருவர் உட்கொள்வதாக 2010ஆம் ஆண்டில் கண்டறியப்பட்டது. இருப்பினும், இது 2019ஆம் ஆண்டில் 3,600ஆக அதிகரித்திருந்தது.
உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்படி, ஒருவர் ஒரு நாளில் உட்கொள்ளக்கூடிய உப்பின் அளவு 2,000 மில்லிகிராமுக்கு மேல், அதாவது ஒரு தேக்கரண்டிக்கு மேல் போகக்கூடாது என்று கூறப்படுகிறது.
சிங்கப்பூரர்கள் அன்றாடம் சேர்த்துக்கொள்ளும் உப்பின் அளவை 15% குறைத்துக்கொண்டால், ஒரு நாளில் பதிவாகும் உப்பளவு 3,100 மில்லிகிராம் ஆகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அளவுக்கு அதிகமான சோடியத்தை உட்கொள்ளும் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு பின்னாளில் மாரடைப்புக்கும் பக்கவாதத்துக்கும் இட்டுச் செல்லலாம்.
வழக்கமாக உட்கொள்ளும் உப்பின் அளவில் சோடியம் 40 விழுக்காடாக இருக்கும். இதன்படி, 1,000 மில்லிகிராம் உப்பில் 400 மில்லிகிராம் சோடியமாக இருக்கும்.
பொட்டாசியம் குளோரைடு போன்ற மாற்று உப்பு வகைகளைப் பயன்படுத்தினால் ஒருவர் உட்கொள்ளும் சோடியத்தின் அளவு குறையும். இதனால் ரத்த அழுத்தம் சீரடையும். சிங்கப்பூரர்கள் சராசரியாக ஒரு நாளில் உட்கொள்ளவேண்டிய பொட்டாசியத்தின் அளவு 3,500 முதல் 4,700 மில்லிகிராமாக இருக்க வேண்டும். எனவே மாற்று உப்பு வகையாக பொட்டாசியம் குளோரைடைப் பயன்படுத்தினால் தற்போது சிங்கப்பூரர்கள் உட்கொள்ளும் சராசரி பொட்டாசியம் அளவு 2,500 மில்லிகிராமிலிருந்து சற்று அதிகமாகலாம்.
இருப்பினும், மாற்று உப்பு வகைகளின் விலை, வழக்கமாகப் பயன்படுத்தப்படும் உப்பைக் காட்டிலும் 10 மடங்கு விலையாகும்.
விலையைக் கட்டுப்படியானதாக்க, பிரதான சில்லறை வர்த்தகங்களுடன் வாரியம் இணைந்து செயல்படவுள்ளது. 'கே-சால்ட்' (K-salt) என்ற பெயரில் இத்தகைய குறைந்த விலையிலான உப்பு 2023ஆம் ஆண்டுக்குள் கடைகளில் விற்கப்படும்.
இது அடுத்த மாதம் முதல் ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் பேரங்காடிகளில் விற்பனையாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சாதாரண உப்புடன் ஒப்பிடுகையில் 'கே-சால்ட்' உப்பில் 30 விழுக்காட்டுக்கும் அதிக சோடியம் இருக்கும். இவ்வாறு 400 கிராம் கொண்ட உப்பு பேக்கட்டுக்கு விலை $2.50 என்று கூறப்படுகிறது.
இதற்கிடையே, ஆரோக்கியமான சுவைச்சாறு, சுவையூட்டி ஆகியவை வரும் ஆண்டுகளில் அதிகமாக்கப்படுவதுடன் பலதரப்பட்டவையாக விற்கப்படும்.
கூடுதல் செய்தி - பக்கம் 2ல்

