ரஷ்யா உக்ரேனின் மேலும் நான்கு பகுதிகளை வெள்ளிக்கிழமை அன்று அதிகாரபூர்வமாக தனது நாட்டின் பகுதிகளாக இணைக்கவிருக்கிறது.
மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் மாளிகை இதைத் தெரிவித்தது.
அதன் தொடர்பிலான கையெழுத்திடும் நிகழ்ச்சியை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நடத்துவார் என்று அதிபர் மாளிகை கூறியது.
ரஷ்யாவில் இணைவது குறித்து லுஹான்ஸ்க், டொனெட்ஸ்க், கெர்சன், ஸாபோரிஸியா ஆகிய நான்கு வட்டாரங்களில் பொது வாக்கெடுப்பு நடத்தியதாக ரஷ்யா கூறுகிறது.
ஆனால் அது வெறும் நாடகமே என்று மேற்கத்திய நாடுகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ரஷ்யா இணைத்துக்கொள்ள திட்டமிடும் நான்கு பகுதிகளும் முழுமையாக அதன் கட்டுப்பாட்டுக்குள் இல்லை.
இவ்வேளையில் கடந்த சில நாள்களில் மட்டும் ரஷ்யாவிலிருந்து குறைந்தது 200,000 ரஷ்யர்கள் அந்நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
கூடுதல் படைகளைத் திரட்ட சேமப்படையினரை உக்ரேன் போரில் ஈடுபடுத்தப்போவதாக திரு புட்டின் முன்பு அறிவித்திருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
அதைத் தொடர்ந்து மக்கள் குறிப்பாக ஆண்கள் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.
நடந்தும், சைக்கிளிலும் காரிலும் அவர்கள் பல நாள்கள் பயணம் செய்து வருகின்றனர்.
மங்கோலியா, கஸாக்ஸ்தான், ஜார்ஜியா, ஃபின்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்குச் செல்ல வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் காணொளிகள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.
போரில் ரஷ்யா சந்தித்து வந்துள்ள பல பின்னடைவுகளில் இதுவும் ஒன்றாகச் சொல்லப்படுகிறது.


