பொன்மணி உதயகுமார்
தீபாவளியை முன்னிட்டு என்டியுசி ஃபேர்பிரைஸ் நிறுவனம் $40,000 தொகையை சிண்டாவின் நன்கொடைத் திட்டத்திற்கு வழங்கியுள்ளது.
தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் இந்து சமூகத்திற்குத் தங்களால் முடிந்த பங்கை ஆற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் ஃபேர்பிரைஸ் இதை வழங்கியுள்ளதாக நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி இலைன் ஹெங் கூறினார்.
'சிட்டி ஸ்குவேர்' பேரங்காடியின் ஃபேர்பிரைஸ் கிளையில் நேற்று நடந்த ஒளியூட்டு நிகழ்ச்சியில் பிரதமர் அலுவலக அமைச்சரும் தேசிய வளர்ச்சி மற்றும் நிதி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
சிண்டாவின் நன்கொடைத் திட்டத்திற்கு 2011ஆம் ஆண்டு முதல், இதுவரை $320,000 வழங்கியுள்ள ஃபேர்பிரைஸ், கடந்த ஆண்டை காட்டிலும் இருமடங்கு நன்கொடை தொகையை இவ்வாண்டு வழங்கியுள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிண்டாவின் ஐந்து பயனாளிக் குடும்பங்களுக்கு ஃபேர்பிரைஸ் $100 மதிப்புள்ள பற்றுச்சீட்டுகளையும் வழங்கியது. இந்த பற்றுச்சீட்டுகளைக் கொண்டு பொருள்கள் வாங்கிய குடும்பத் தலைவிகளில் ஒருவர் திருவாட்டி வள்ளி கிருஷ்ணசாமி, 41.
முன்பு தாதியாகப் பணிபுரிந்த இவர், பிள்ளைகளைப் பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டு கடந்த 15 ஆண்டுகளாக இல்லத்தரசியாக உள்ளார்.
சிண்டாவின் திட்டங்களில் வெகு நாட்களாகப் பயனடைந்து வரும் இவர், பொருள்களின் விலைஏற்றத்தால், இந்த ஆண்டு வழங்கப்பட்ட பற்றுச்சீட்டுகள் தனக்குக் கூடுதல் பொருள்கள் வாங்க உதவியது என்று கூறினார்.
நான்கு பிள்ளைகளின் ஒற்றைப் பெற்றோரான திருவாட்டி ஷாமளா, 42, இந்தத் தொகை தனக்குப் பெரும் உதவியாக இருக்கும் என்று கூறினார். "இது மாதிரியான உதவிகள் சிறிய தொகையாகத் தென்பட்டாலும் அது குடும்பங்களுக்குப் பெரும் உதவியாக அமைகிறது," என்றார் அவர்.
நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நன்கொடை காசோலையைப் பெற்றுக்கொண்ட சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன், எந்த ஒரு குடும்பமும் பணம் இல்லாததால் பண்டிகையைக் கொண்டாடாமல் தனித்து இருந்துவிடக் கூடாதென்றும் குறைந்த வருமானம் ஈட்டும் குடும்பங்களின் வீடுகளில் இந்த உதவித் தொகை ஒளியூட்டும் என்று நம்புவதாகவும் கூறினார்.
"உதவி தேவைப்படும் குடும்பங்களுக்கும் மாணவர்களுக்கும் இந்தத் தொகை பயனளிக்கும்.
"இதில் பெரும்பான்மையான தொகை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிண்டாவின் அன்பளிப்புப் பற்றுச்சீட்டுகள், பைகள் மூலம் குடும்பங்களுக்குச் சென்றடையும்," என்றும் சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

