வீடு வாங்குபவர்கள் பெறும் உச்சவரம்பு கடன் அளவு குறைக்கப்படவுள்ளது. கடன் வாங்கிய பின்னர், அதை அடைப்பதில் ஏற்படும் சிரமங்களை குறைக்க இந்த நடவடிக்கை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை வீடமைப்பு வளர்ச்சி கழக (வீவக) வீடுகளுக்கும் தனியார் வீடுகளுக்கும் பொருந்தும்.
வீவக வீடுகள் வாங்குபவர்கள் வீட்டு மதிப்பின் அடிப்படையில் எடுக்கக்கூடிய கடன் அளவு 85 விழுக்காட்டிலிருந்து 80 விழுக்காட்டுக்கு குறைக்கப்படும். அதாவது வீடு வாங்குபவர்கள் குறைவான கடனையே இப்போது பெறமுடியும். இன்று முதல் இந்த நடவடிக்கை நடப்புக்கு வரும்.
உயர்ந்துவரும் வீட்டுக்கடன் வட்டி விகிதத்தை நிலைப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் நிதி ஆணையம்,தேசிய வளர்ச்சி அமைச்சு, வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் ஆகியவை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. சொத்துச் சந்தையை நிலைப்படுத்தவும், கடன் வாங்குபவர்கள் அளவுக்கு அதிகமாக கடன் வாங்காமல் இருப்பதை உறுதிசெய்யவும் இந்த நடவடிக்கைகள் உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
இதோடு, தனியார் வீட்டை விற்பவர்கள் வீவக மறுவிற்பனை வீட்டை வாங்குவதற்கு முன் 15 மாதம் காத்திருக்கவேண்டும். தனியார் வீட்டை விற்றுவிட்டு நான்கறை அல்லது அதைவிடச் சிறிய மறுவிற்பனை வீட்டை வாங்க எண்ணும் 55 வயதுக்கும் மேலான முதியவர்கள் ஒன்றரை ஆண்டுவரை காத்திருக்க தேவையில்லை.