உக்ரேனின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்த டொனேட்ஸ்க், லுஹான்ஸ்க், ஸபோரிஸியா, கெர்சோன் ஆகிய நான்கு பகுதிகளை ரஷ்யாவுடன் இணைத்துவிட்டதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் நேற்று அறிவித்தார்.
கடந்த ஏழு மாதங்களாக நடந்து வரும் போரில் அந்த நான்கு இடங்களை ரஷ்யப் படைகள் முழுமையாகக் கைப்பற்றவில்லை. அவற்றின் ஒரு பகுதியை மட்டுமே அவற்றால் கைப்பற்ற முடிந்தது.
கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்களா என்பதை நிர்ணயிக்க ரஷ்யா அண்மையில் வாக்கெடுப்பு நடத்தியது. அந்த வாக்களிப்பு செல்லாது என்றும் அதை ஏற்க முடியாது என்றும் உக்ரேனும் மேற்கத்திய நாடுகளும் குரல் எழுப்பின.
கைப்பற்றப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் ரஷ்யாவுக்குச் சாதகமாக வாக்களிக்க வற்புறுத்தப்பட்டதாக அவை குறைகூறுகின்றன.
உக்ரேனுக்குச் சொந்தமான நான்கு பகுதிகளைக் கைப்பற்றி ரஷ்யாவுடன் இணைத்துக்கொண்டதை அடுத்து, பழைய சோவியத் யூனியனை உருவாக்குவது தமது இலக்கல்ல என்று புட்டின் கூறினார்.
தனது புதிய நிலப்பகுதிகளை ரஷ்யா தற்காக்கும் என்றார் அவர்.
இதனால் உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் மேலும் மோசமடையும் என்று
அஞ்சப்படுகிறது.
இந்நிலையில், உக்ரேனுக்கு எதிரான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள் மிக மோசமான பின்னடைவை எதிர்நோக்கு
கின்றன. உக்ரேனிடமிருந்து கைப்பற்றப்பட்ட டொனேட்ஸ்க் பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் இனி தங்கள் கட்டுப்பாட்டின்கீழ் இல்லை என்று ரஷ்ய ஆதரவு பிரிவினைவாத தலைவர் டெனிஸ் புஷிலின் தெரிவித்தார். இதனால் டொனேட்ஸ்க் பகுதியில் உள்ள ரஷ்யாவின் பிரதானப் படைகளை உக்ரேனியப் படைகள் பாதி அளவில் சுற்றி வளைத்துள்ளளன.
உக்ரேனிடம் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதிகள் ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட நாளில் ரஷ்யாவுக்கு ஏமாற்றத்தையும் பின்னடைவையும் ஏற்படுத்த உக்ரேனிய ராணுவம் தன்னால் ஆன அனைத்தையும் செய்து வருவதாக புஷிலின் தெரிவித்தார்.
"இது எங்களுக்கு விரும்பத்
தகாத செய்தி. இனி நிலைமையை நிதானமாகக் கையாள வேண்டும். செய்த தவறுகளை அடையாளம் கண்டு அவற்றை மீண்டும் செய்யாமல் புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்," என்றார் புஷிலின்.
இதற்கிடையே, உக்ரேனின் ஸபோரிஸியா நகரில் போரினால் பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை ஏற்றிச் சென்ற வாகனங்களை ரஷ்ய ஏவுகணை
தகர்த்தது.
இதில் குறைந்தது 23 பேர் மாண்டனர். இந்தச் சம்பவம் நேற்று நிகழ்ந்தது.
ஏவுகணை தாக்கியதில் பலர் மாண்டுவிட்டதாகவும் காயமடைந்திருப்பதாகவும் ஸ்போரிஸியா நகரின் வட்டார ஆளுநர் ஒலெக்சாண்டர் ஸ்டாருக் தெரிவித்தார்.
சடலங்களை மீட்கும், காய
மடைந்தோரைக் காப்பாற்றும் பணிகளில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருவதாக டெலிகிராம் செயலி மூலம் அவர் பதிவிட்டார்.

