சிங்கப்பூரில் சமூகப் பிணைப்பை மேம்படுத்தி, மூப்படைதல் தொடர்பான எதிர்மறையான சிந்தனைகளை எதிர்கொள்ள உதவும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மூத்தோர் பொருளியல் வாய்ப்புகள் பெறுவதை மக்கள் செயல் கட்சியின் (மசெக) மூத்தோர் குழு உறுதிசெய்ய உள்ளது. அதோடு, வாழ்வின் இறுதிக்கட்டத்தில் மூத்தோருக்கு மேம்பட்ட பராமரிப்பை வழங்க உதவும் திட்டங்களையும் அது கொண்டுள்ளது.
சிங்கப்பூர் மக்கள்தொகை வேகமாக மூப்படைந்துவரும் வேளையில், மூத்தோரின் எதிர்பார்ப்புகளும் விருப்பங்களும் மாறி வருவதால் அவர்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்பட வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் தெரிவித்துள்ளார்.
மூத்தோருக்கான அனைத்துலக தினத்தைக் குறிக்கும் விதமாக நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், கட்சி ஆர்வலர்கள், ஓய்வுபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் என 300 பேர் முன்னிலையில் உரையாற்றினார்.
"இப்போது கூடுதலான மூத்தோர் சுறுசுறுப்பாக இருக்க விரும்புகின்றனர். அவர்கள் நீண்டநாள் ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது எனக்கு உறுதியாகத் தெரியும். அவர்கள் கூடுதல் கல்வியறிவு பெற்று, தன்னிச்சையாகவும் நிதி வசதியுடனும் இருப்பார்கள்," என்றார் திரு வோங்.
மூத்தோர் குறித்த சமுதாயத்தின் கண்ணோட்டமும் மாற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், "மூத்தோரை நம்முடைய சொத்துகளாகப் பார்க்க வேண்டும். அவர்களது பழுத்த அனுபவம் மற்றும் அறிவிலிருந்து கற்றுக்கொள்ள புதிய வழிமுறைகளை நாம் கண்டறிய வேண்டும்," என்று சொன்னார்.
மூத்தோர் சிறந்த பொருளியல் வாய்ப்புகள் பெறுவதை உறுதிசெய்ய, அவர்கள் விரும்பினால் ஊழியரணியில் கூடுதல் காலம் தொடர மசெக மூத்தோர் குழு உதவும். வேலையிடத்தில் நியாயமற்ற முறையில் நடத்தப்படுவதில் இருந்து ஊழியர்களைப் பாதுகாக்க பாகுபாடு எதிர்ப்புச் சட்டம் வரையப்பட்டு வருகிறது.
"வேலைவாய்ப்புகள், வேலையிட மற்றும் வேலைநியமன நடைமுறைகள் என வரும்போது, வேறென்ன செய்யப்பட வேண்டும் என்பது குறித்து நாங்கள் தொடர்ந்து ஆய்வு செய்வோம்," என்று திரு வோங் குறிப்பிட்டார்.
கூடுதலான மூத்தோர் குடும்ப ஆதரவின்றித் தனியாக வசித்து வரும் நிலையில், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்து மூத்தோர் குழு ஆராயும்.
வாழ்வின் இறுதிக்கட்டத்தில் அளிக்கப்படும் பராமரிப்புக் குறித்து பேசிய திரு வோங், "மூத்தோர் அவர்களது கடைசிக்காலத்திலும் பராமரிப்பின் தரத்தைக் கட்டிக்காக்க நாம் உதவ வேண்டும். அப்போதுதான் தங்களது கடைசி விருப்பங்களை அவர்களால் பூர்த்திசெய்ய முடியும்," என்றார் அவர்.
மூத்தோரைப் பராமரிப்பவர்களுக்கும் முற்றிய நோயால் அவதியுறுபவர்களுக்கும் ஆதரவளிக்க, மசெக மூத்தோர் குழுவைச் சேர்ந்த ஏறக்குறைய 120 ஆர்வலர்கள் அந்திமக்காலப் பராமரிப்பு வழங்கும் பயிற்சியில் பங்கெடுத்துள்ளனர். அவர்களில் சிலர் சமூகத்தில் அந்திமக்காலப் பராமரிப்புத் தூதர்களாகி உள்ளனர்.
நேற்றைய நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக்குழுத் தலைவரும் ஜூரோங் குழுத்தொகுதி எம்.பி.யுமான திரு ஸியே யாவ் சுவான், சிங்கப்பூரின் எதிர்காலத்தைக் கட்டமைக்க மூத்தோர் தொடர்ந்து முக்கியப் பங்காற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.