எட்டு மாதப் பெண் குழந்தை, அதன் பெற்றோர் உட்பட இந்திய வம்சாவளியினர் நால்வர் அமெரிக்காவில் கடத்தப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கலிஃபோர்னியா மாநிலம், மெர்செட் நகரில் நேற்று முன்தினம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஜஸ்தீப் சிங், 36, அவரின் மனைவி ஜஸ்லீன் கோர், 27, இவர்களின் எட்டு மாதக் குழந்தை அரூஹி தேரி, அமன்தீப் சிங், 39, ஆகிய நால்வரும் கடத்தப்பட்டதாக மெர்செட் நகரக் காவல்துறையைச் சுட்டி, செய்தி வெளியாகியுள்ளது.
சில்லறை விற்பனைக் கடைகளும் உணவகங்களும் நிறைந்த சாலைப் பகுதியில் இச்சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
கடத்தல்காரனாகச் சந்தேகிக்கப்படுபவரிடம் ஆயுதம் இருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
விசாரணை தொடக்கக் கட்டத்தில் இருப்பதால் கடத்தல் சம்பவம் குறித்து அதிகத் தகவல் வெளியாகவில்லை. சந்தேகப் பேர்வழியின் பெயர், கடத்தலுக்கான காரணம் போன்ற தகவல்களும் வெளியிடப்படவில்லை.
கடத்தல்காரனையோ கடத்தப்பட்டவர்களையோ நெருங்க வேண்டாம் என்று பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. அவர்களில் எவரையேனும் பார்க்க நேர்ந்தால் தகவல் தெரிவிக்கும் படியும் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள தமது வீட்டிலிருந்து கடத்தப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த துஷார் ஆர்த்தே எனும் ஆடவர், பின்னர் தம் காதலியின் காரில் மாண்டுகிடந்தது நினைவுகூரத்தக்கது.