சாங்கி விமான நிலையத்தில் 34 கிலோகிராம் எடையுள்ள காண்டாமிருகக் கொம்புகள் பிடிபட்டுள்ளன. இவற்றின் மதிப்பு $1.2 மில்லியன். சிங்கப்பூரில் இந்த அளவுக்கு அதிகமான காண்டாமிருகக் கொம்புகள் பிடிபட்டுள்ளது இதுவே முதல்முறை.
தென்னாப்பிரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வழியாக லாவோஸ் செல்லவிருந்த பயணியின் இரு உடைமைகளை அதிகாரிகள் சோதித்தபோது 20 கொம்புகளை அவர்கள் கண்டுபிடித்தனர். அந்தப் பயணி கைது செய்யப்பட்டதாக தேசிய பூங்காக் கழகம் நேற்று தெரிவித்தது.
சோதனையில் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளும் தேசிய பூங்காக் கழகத்தின் கே9 பிரிவு அதிகாரிகளும் ஈடுபட்டனர். காண்டாமிருகக் கொம்புகள் ஆபத்தான காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் அனைத்துலக வர்த்தக மரபுகளின்கீழ் பாதுகாக்கப்
படுகின்றன. இவற்றை அனைத்துலக அளவில் விற்பனை செய்ய தடை உள்ளது.
இந்த மரபைப் பின்பற்றும் சிங்கப்பூர், வனவிலங்குகளின் நீண்ட வாழ்வை உறுதிசெய்யும் பொருட்டு சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தை முறியடிக்கும் அனைத்துலக முயற்சிகளுக்குக் கடப்பாடு கொண்டுள்ளதாக தேசிய பூங்காக் கழகம் குறிப்பிட்டுள்ளது.