தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு; குழந்தைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு; குழந்தைகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்

1 mins read
6129e849-64a1-4417-b163-b0f96fa77a1e
துப்பாக்கிச்சூடு நடந்த குழந்தை பராமரிப்பு நிலையத்துக்கு வெளியே காணப்படும் மக்கள் கூட்டம். படம்: ராய்ட்டர்ஸ் -
multi-img1 of 2

தாய்லாந்தின் வடகிழக்கு மாநிலத்தில் உள்ள குழந்தை பராமரிப்பு நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (அக்டோபர் 6) நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர்.

உயிரிழந்தவர்களில் பெரியவர்களும் குறைந்தது 22 குழந்தைகளும் அடங்குவர் என்று தெரிவித்த உள்ளூர் காவல்துறை, துப்பாக்கிச்சூடு நடத்தியவன் 34 வயது முன்னாள் காவல்துறை அதிகாரி என்றது.

துப்பாக்கிச்சூடு நோங் புவா லாம் பு மாநிலத்தில் நடந்ததாக தேசிய காவல்துறை பேச்சாளர் தெரிவித்தார்.

குழந்தை பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு, வீட்டிற்குச் சென்று தம்முடைய மனைவியையும் பிள்ளையையும் அந்த துப்பாக்கிக்காரன் சுட்டுக்கொன்றதாக நோங் புவா லாம் பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை அதிகாரி ஜக்கபத் விஜித்ரைத்தையா தெரிவித்தார். பின்னர் அவன் துப்பாக்கியால் தம்மைச் சுட்டு உயிரை மாய்த்துக்கொண்டதாகவும் திரு ஜக்கபத் கூறினார்.

இச்சம்பவத்தில் குறைந்தது 12 பேருக்குக் காயம் ஏற்பட்டதாக காவல்துறை கூறியது.

தாய்லாந்தில் துப்பாக்கி வைத்திருக்கும் விகிதம், இந்த வட்டாரத்தின் மற்ற நாடுகளைவிட அதிகம்.

தாய்லாந்தில் பெரிய அளவில் துப்பாக்கிச்சூடு நடத்தப்படுவது அரிது. ஆனால் 2020ல் சொத்து பிரச்சினையால் கோபமடைந்த ராணுவ வீரன் ஒருவன் குறைந்தது 29 பேரைக் கொன்றுவிட்டு 57 பேரைக் காயப்படுத்தினான்.

குறிப்புச் சொற்கள்