சிங்கப்பூருக்கு பிராய்லர் உயிர்க் கோழிகளை ஏற்றுமதி செய்ய மலேசியா விதித்திருந்த தற்காலிகத் தடை நாளை, அக்டோபர் 11ஆம் தேதி முதல் நீக்கப்படுகிறது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு நேற்று அறிவித்தது.
அந்தத் தடை அகல்வது பற்றி மலேசியாவின் கால்நடை சேவைத் துறை அதிகாரபூர்வமாக தன்னிடம் உறுதிப்படுத்தி இருக்கிறது என்று அந்த அமைப்பு கூறியது.
தடை அகன்று சிங்கப்பூருக்கு மலேசியாவில் இருந்து உயிருடன் கோழிகள் வருவதை தாங்கள் வரவேற்பதாகவும் மேலும் விவரங்களை நாடுவதாகவும் அந்த முகவை குறிப்பிட்டது.
மலேசியாவில் கோழி உற்பத்தி குறைந்து விலை ஏறியதால் அதைச் சமாளிக்கும் முயற்சிகளில் ஒன்றாகக் கடந்த ஜூன்1 முதல் சிங்கப்பூருக்கான கோழி ஏற்றுமதிக்கு மலேசிய அரசாங்கம் தடைவிதித்து இருந்தது.
மலேசியாவில் கோழி உற்பத்தி குறைந்து விலை ஏறிவிட்டதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அந்தத் தடை நடப்புக்கு வந்தது. சில வர்த்தகர்கள் தங்கள் விலையை வரம்புக்கு மேலும் உயர்த்தி விற்பதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.
ஜூன் மாத நடுப் பகுதியில் மலேசியத் தடையின் ஒரு பகுதி நீக்கப்பட்டது.
சிங்கப்பூரில் உள்ள இறக்கு மதியாளர்கள் கம்பத்துக் கோழிகளையும் கறுப்புக் கோழிகளையும் உயிரோடு இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.
வெளி நிலவரங்கள் காரணமாக சிங்கப்பூர் அப்போதைக்கு அப்போது உணவுப்பொருள் வரத்தில் பிரச்சினைகளை தொடர்ந்து எதிர்நோக்கும் என்பதால் கோழிகளை வாங்குவதற்கு மேலும் பல வழிகளைத் தான் தொடர்ந்து காணப்போவதாகவும் இந்தத் தொழில்துறையுடன் சேர்ந்து செயல்பட்டு பன்மய முயற்சிகளை முடுக்கிவிடப் போவதாகவும் உணவு அமைப்பு தெரிவித்தது.
"நிறுவனங்கள் தங்களுடைய தொழில் தொடர்ச்சித் திட்டங்களை மறுபரிசீலனை செய்ய நாங்கள் ஊக்கமூட்டுகிறோம்.
"மேலும் பன்மய அணுகுமுறைகளை அவை கையாள வேண்டும். உணவுப்பொருள் வரத்தில் இடையூறு ஏற்படும்போது பாதிப்பு இல்லாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இத்தகைய அணுகுமுறை உதவும்," என்று உணவு அமைப்பு குறிப்பிட்டு இருக்கிறது.
பொதுமக்களும் தங்களுடைய விருப்பங்களை விட்டுகொடுத்து நடந்துகொண்டால், உணவுப்பொருள்களைப் பொறுத்தவரை சிங்கப்பூர் மீள்திறனுடன் திகழ அது உதவும் என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது.

