பிள்ளை பராமரிப்பில் தாய், தந்தைக்கு சம பொறுப்பு என 99 விழுக்காட்டினர் கருத்து
குடும்பத்தை உருவாக்கும் ஆர்வம் சிங்கப்பூரில் வலுவாக உள்ளது. 10ல் எட்டு சிங்கப்பூர் இளையர்கள், அதாவது 80 விழுக்காட்டு இளையர்கள் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக திருமணம், பிள்ளை வளர்ப்பு ஆய்வு தெரிவித்து உள்ளது.
21 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட ஒற்றையரில் 80 விழுக்காட்டினர் மணம் புரிந்துகொள்ள விருப்பம் தெரிவித்தபோதிலும் இந்த விகிதம் ஆண்டுக்காண்டு குறைந்து வருவதை ஆய்வு உணர்த்துகிறது.
உதாரணமாக, மணம் புரிய விரும்பும் இளையோரின் விகிதம் 2012ஆம் ஆண்டு 86 விழுக்காடா கவும் 2016ஆம் ஆண்டு 83 விழுக்காடாகவும் குறைந்து வந்தது.
ஆய்வு, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கும் ஜூன் மாதத்திற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவுகளை தேசிய மக்கள்தொகை, திறனாளர் பிரிவு நேற்று வெளியிட்டது.
வேலையில் இருப்பதும் குடும்பத்தை உருவாக்குவதும் சம அளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்று 21 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்டோரில் முக்கால்வாசிப் பேர் கருதுகின்றனர். இந்த விகிதம் இதற்கு முன்னர் இருந்ததைப்போலவே உள்ளது. இருப்பினும், இந்த வயதுப் பிரிவினரில் 14 விழுக்காட்டினர் வேலையைக் காட்டிலும் குடும்பமே மிகவும் முக்கியமானது என்கின்றனர்.
ஒற்றையரில் 77 விழுக்காட்டினர் மணம் முடித்து குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்து உள்ளனர். 21 வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட திருமணம் செய்துகொள்ளாத 2,848 ஒற்றையரும் மணம் புரிந்துகொண்ட 3,017 பேரும் ஆய்வில் பங்கேற்று கருத்துக் கூறினர்.
மணம் புரிந்தோரில் ஆக அதிகமானோர், அதாவது 92 விழுக்காட்டினர் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள விருப்பம் தெரிவித்தனர். இதற்கு முன்னர் 2012ஆம் ஆண்டும் 2016ஆம் ஆண்டும் இதேபோல ஆக அதிகமானோர் ஒன்றிரண்டு குழந்தை பெற விருப்பம் கொண்டிருந்தனர்.
இவ்வாறு மணம் புரிந்த அதிகம் பேர் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினாலும் ஆய்வின்போது அவர்களில் பலருக்கு ஒரு குழந்தை இருந்தது. அல்லது குழந்தை எதுவும் இல்லாதவர்களாக இருந்தனர்.
அதிகக் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பாதவர்கள் அதற்கு மூன்று முக்கிய காரணங்களை குறிப்பிட்டனர். அதில் முதலாவது செலவு. அடுத்ததாக, ஏற்கெனவே போதுமான குழந்தையைப் பெற்றுக் கொண்டது. குழந்தைகளை வளர்ப்பதில் சந்திக்கும் மன உளைச்சல் மூன்றாவது காரணம்.
திருமணம் புரிந்துகொள்வதிலும் பிள்ளைகளை வளர்ப்பதிலும் சிங்கப்பூரர்களிடையே இருக்கும் ஆர்வம் முந்திய ஆய்வுகளைப்போலவே அதிகமாக உள்ளதை 2021ஆம் ஆண்டின் ஆய்வு குறிப்பிட்டது.
குழந்தைகளைப் பராமரிப்பதில் தாய், தந்தை இருவருக்குமே சம பொறுப்பு உண்டு என்று ஆய்வில் பங்கேற்ற, மணமானோரில் 99 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
அதற்கிணங்க, குழந்தைகளை அவர்களின் தாயார்தான் முழுநேரமாகக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற அம்சம் தொடர்பான ஆதரவு படிப்படியாகக் குறைந்து வருகிறது.
2016ஆம் ஆண்டு 40 விழுக்கா டாக இருந்த இருந்த ஆதரவு 2021ஆம் ஆண்டு 24 விழுக்காட்டுக்கு இறங்கியது.