இலங்கை அரசாங்கம், தனது நாட்டின் தகுதியை குறைந்த வருமானம் கொண்ட நாடாக கீழிறக்க முடிவு செய்துள்ளது.
இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கடந்த 2021ல் இலங்கையின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 3,815 அமெரிக்க டாலராக இருந்தது.
அதன்படி இலங்கை குறைந்த-நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டிருந்தது என்று உலக வங்கியின் தகவல் தெரிவிக்கிறது.
இந்த நிலையில் உலக வங்கியின் பட்டியலில் இலங்கையை வருமானம் குறைந்த நாடாக வகைப் படுத்த அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்று அமைச்சரவை பேச்சாளர் பண்டுலா குணவர்தனே நேற்று தெரிவித்தார்.
"இலங்கை கடுமையான பொருளியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.
"இந்த நிலையில் குறைந்த வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டால் நிதியுதவி கிடைப்பது எளிது என்ற அனைத்துலக அமைப்புகள் எங்களிடம் தெரிவித்தனர்," என்று அந்தப் பேச்சாளர் சொன்னார்.
1948ஆம் ஆண்டு சுதந்திரத்துக்குப் பிறகு 22 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இலங்கை, வரலாறு காணாத பொருளியல் நெருக்கடியில் மூழ்கியிருக் கிறது.
சுற்றுப் பயணிகளைச் சார்ந்த அதன் பொருளியல் கொவிட்-19 கொள்ளைநோய் காரணமாக அதல பாதாளத்தில் விழுந்து கிடக் கிறது.
வெளிநாட்டிலிருந்து ஊழியர்கள் அனுப்பும் பணமும் குறைந்தது. கடந்த ஆண்டு ரசாயன உரங்ககள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை விவசாயத்தையும் பதம் பார்த்தது.
இந்த நெருக்கடி, உணவு, எரிபொருள், மருந்து ஆகியவற்றை இறக்குமதி செய்வதற்கான அந்நியச் செலாவணி பற்றாக்குறை, ரூபாயின் வீழ்ச்சி, பணவீக்கம் போன்றவற்றுக்கு வழி வகுத்தது.
இதற்கிடையே இலங்கையின் மத்திய வங்கி 2022ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 விழுக்காடு சுருங்கும் என்று கணித்துள்ளது.
இலங்கையின் வருமானம் குறைந்த நாடாக வகைப்படுத்தும் திட்டத்துக்கு உலக வங்கி பதில் எதுவும் தெரிவிக்கவில்லை.

