பேருந்து, ரயில் பயணக் கட்டணம் 2.9% உயரும் என்று பொதுப் போக்குவரத்து மன்றம் அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் மாதம் 26ஆம் தேதியிலிருந்து புதிய கட்டணம் அமல்படுத்தப்படும்,
பெரியவர்களுக்கான பயணக் கட்டணம் 4 முதல் 5 காசு கூடும். சலுகைக் கட்டண அட்டைகளைப் பயன்படுத்தும் மூத்த குடிமக்கள், மாணவர்கள், உடற்குறையுள்ளோர், குறைந்த வருமான ஊழியர்களுக்கான கட்டணம் ஒரு காசு கூடும்.
ரொக்கக் கட்டணம், மாதாந்திரச் சலுகைக் கட்டணம் ஆகியவற்றில் மாற்றம் செய்யப்படவில்லை.
8.2 கிலோமீட்டர் வரையிலான பயணத்திற்கு, எடுத்துக்காட்டாக, பூன் லேயிலிருந்து கிளமென்டி வரை ரயிலில் செல்ல பெரியவர்கள் 4 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும். 8.2 கிலோமீட்டருக்கு மேற்பட்ட பயணத்திற்குப் பெரியவர்கள் 5 காசு கூடுதலாகச் செலுத்த வேண்டும்.
கட்டண உயர்வைச் சமாளிக்க அரசாங்கம் 600,000 பொதுப் போக்குவரவு பற்றுச்சீட்டுகளை வழங்கும். ஒவ்வொரு பற்றுச்சீட்டின் மதிப்பு $30 எனத் தெரிவிக்கப்பட்டது.

