மலேசியாவிலிருந்து புதிய பிராய்லர் கோழிகள் இங்குள்ள பேரங்காடிகளில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் மீண்டும் விற்பனைக்கு வந்தன.
உள்நாட்டில் கோழி இறைச்சிக்குப் பற்றாக்குறை நிலவியதால் கிட்டத்தட்ட நாலரை மாதங்களாக கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதித்திருந்தது.
மலேசியாவிலிருந்து மாதத்திற்கு ஏறக்குறைய 1.8 மில்லியன் கோழிகள் சிங்கப்பூருக்கு வரவழைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோழி ஏற்றுமதிக்கு மலேசியா தடை விதிப்பதற்கு முன்னர் இந்த எண்ணிக்கை 3.6 மில்லியனாக இருந்தது.
உணவு விநியோகிப்பாளரான 'கீ சோங் ஃபுட்' விற்கும் 'சக்குரா ஃபிரெஷ் சிக்கன்ஸ்', இயூ டீயில் உள்ள ஃபேர்பிரைஸ் பேரங்காடியில் பிற்பகல் 3 மணியளவில் அடுக்கப்பட்டன. ஒவ்வொரு கோழியின் எடை 1.3 கிலோ முதல் 1.6 கிலோ வரையிலும் அதன் விலை $14.80வும் இருந்தது.
மலேசிய பிராய்லர் கோழிகள் நாளை வெள்ளிக்கிழமை காலையிலிருந்து ஈரச்சந்தைகளில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


