விலைவாசி உயர்வைச் சமாளிக்க உதவி; 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $500 வரை ரொக்கம்
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க மேலும் $1.5 பில்லியன் ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தைத் துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.
சிங்கப்பூரர்கள் அடங்கிய அனைத்துக் குடும்பங்களுக்கும் இந்த ஆதரவு கிடைக்கும்.
புதிய ஆதரவுத் திட்டத்தின் ஓர் அங்கமாகப் புதிய வாழ்க்கைச் செலவினச் சிறப்புத் தொகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்மூலம், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் சிங்கப்பூரர்களுக்கு $500 வரை ரொக்க வழங்குதொகை கிடைக்கும். வரி செலுத்துவதற்குக் கணக்கிடப்படும் மதிப்பிடத்தக்க வருமானத்தின் அடிப்படையில் அத்தொகை டிசம்பர் மாதம் வழங்கப்படும்.
அதன்படி, $22,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டுவோருக்கு 500 வெள்ளியும், $34,000 வரையில் வருமானம் ஈட்டுவோருக்கு 400 வெள்ளியும், $100,000 வரை வருமானம் ஈட்டுவோருக்கு 300 வெள்ளியும் வழங்கப்படும்.
இதுகுறித்த மேல் விவரங்கள் அடுத்த மாதம் வெளியிடப்படும்.
இவ்வாண்டின் வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட உத்தரவாதத் தொகுப்புத் திட்டத்தின்கீழ் வழங்கப்பட இருக்கும் பொருள், சேவை வரி ரொக்க வழங்கு தொகையுடன் இத்தொகை வழங்கப்படும்.
இந்த ரொக்க வழங்கீட்டுடன் மேலும் பல ஆதரவுத் திட்டங்களும் புதிய ஆதரவுத் தொகுப்புத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
"குறைந்த வருமானம் ஈட்டுவோரையும் வேலைமூலம் வருமானம் இல்லாத, ஓய்வுபெற்ற முதியவர்களையும் மனத்திற்கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று துணைப் பிரதமர் வோங் கூறினார்.
இந்த ஆதரவு நடவடிக்கைகளால் குறைந்த வருமானமுள்ள குடும்பங்களும் வேலையிலிருந்து ஓய்வுபெற்றவர்களும் வாழ்க்கைச் செலவின உயர்வால் முற்றிலும் பாதிக்கப்படமாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.
நடுத்தர வருமானம் ஈட்டும் குடும்பங்கள் இந்த ஆதரவுத் திட்டங்களால் சராசரியாக ஏறத்தாழ பாதிக்கும் மேலான வாழ்க்கைச் செலவின உயர்வைச் சமாளிக்க முடியும் என்றும் அவர் சொன்னார்.
இவ்வாண்டிற்கான ஒட்டுமொத்த பணவீக்கம் 6 விழுக்காடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று அறிவிக்கப்பட்ட புதிய ஆதரவுத் திட்டத்தின்மூலம் அனைத்துக் குடும்பங்களும் கூடுதலாக $100 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பெறும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தப் பற்றுச்சீட்டுகளைக் குடும்பங்கள் பெறும். இதற்குமுன் இவ்வாண்டில் 200 வெள்ளிக்கான பற்றுச்சீட்டுகள் அறிவிக்கப்பட்டன.
மேலும், $30 பெறுமானமுள்ள 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படவிருக்கின்றன. $1,600க்கும்கீழ் தனிநபர் மாதாந்திர குடும்ப வருமானம் உள்ள குடும்பங்களுக்கு இந்த ஆதரவு கிடைக்கும்.
கல்வி அமைச்சின் நிதி ஆதரவுத் திட்டங்களிலும் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
தகுதிபெறும் வருமான வரம்பு அதிகரிக்கப்படுவதுடன் தொழில்நுட்பக் கல்விக் கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு முதல் கூடுதலான கல்வி உதவி நிதி கிடைக்கும்.
அதிகரித்துவரும் பணவீக்கத்தாலும் வாழ்க்கைச் செலவினங்கள் குறித்த அக்கறைகளாலும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து அரசாங்கம் பல ஆதரவுத் திட்டங்களை அறிவித்து வந்துள்ளது என்று நிதி அமைச்சு அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்த $1.5 பில்லியன் தொகுப்புத் திட்டத்திற்கான தொகையைக் கையிருப்பில் இருந்து எடுக்கத் தேவையில்லை என்று துணைப் பிரதமர் ஓங் சொன்னார்.
ஒமிக்ரான் கொவிட்-19 அலை எதிர்பார்த்ததைவிட சற்று மந்தமான தாக்கத்தையே ஏற்படுத்தியதாலும் அதிகமான தொழில்துறைகள் சீராகத் திறந்துவிடப்பட்டு பொருளியல் மீட்சியை முடுக்கிவிட்டதாலும் இவ்வாண்டின் முதல் பாதியில் கிடைத்த கூடுதல் வருமானத்தைக் கொண்டு ஆதரவு வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முக்கிய அம்சங்கள்
அண்மைய ஆதரவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள ஐந்து முக்கிய அம்சங்கள்:
♦ வாழ்க்கைச் செலவினத்தைச் சமாளிக்க சிறப்புத் தொகையாக வரும் டிசம்பர் மாதம் $500 வரை ரொக்க உதவி வழங்கப்படும்
♦ 2023 ஜனவரி மாதத்தில் அனைத்து சிங்கப்பூர் குடும்பங்களுக்கும் கூடுதலாக $100 சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
♦ ரயில், பேருந்துக் கட்டண உயர்வு பயணிகளிடத்தில் ஏற்படுத்தும் தாக்கத்தைக் குறைக்கவும் அதிகரித்துவரும் செலவினங்களைச் சமாளிக்கவும் பொதுப் போக்குவரத்திற்கு அடுத்த ஆண்டு கிட்டத்தட்ட $200 மில்லியன் மானியம் வழங்கப்படும்
♦ தனிநபர் மாதாந்திரக் குடும்ப வருமானம் $1,600க்கும் கீழுள்ள குடும்பங்களுக்குத் தலா $30 மதிப்புடைய 600,000 பொதுப் போக்குவரத்துப் பற்றுச்சீட்டுகள் வழங்கப்படும்
♦ அதிக மாணவர்கள் பயன்பெறும் வகையில் கல்வி அமைச்சின் நிதியுதவித் திட்டங்களுக்கான வருமான வரம்பு 2023 ஜனவரி 1ஆம் தேதிமுதல் உயர்த்தப்படும்

