சட்டமன்றத்தைக் கலைக்க பல மாநிலங்கள் மறுத்துள்ள போதும் 15வது பொதுத் தேர்தல் நடத்தப் படுவது உறுதி என்று மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும் சட்ட மன்றத்தைக் கலைப்பதற்கான உரிமை மாநிலங்களுக்கு உண்டு என்றும் திரு சப்ரி கூறினார்.
"நாடாளுமன்றமும் சட்ட மன்றங்களும் ஒரே நேரத்தில் கலைக்கப்பட வேண்டும் என்பதே எனது ஆலோசனை, பரிந்துரை," என்று அவர் சொன்னார்.
சட்டமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என்று இதுவரை ஆறு மாநிலங்கள் முடிவெடுத்து இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், ஆனாலும், 15வது நாடாளு மன்றத்திற்கான தேர்தல் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
பொதுத் தேர்தலையும் சட்ட மன்றத் தேர்தல்களையும் தனித் தனியாக நடத்தும்போது வாக்களிப்பதற்காகவே மக்கள் இருமுறை தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வேண்டி இருக்கும் என்பதால், அப்படிச் செய்வது பொதுமக்களுக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் என்றார் பிரதமர்.
தனித்தனியாக தேர்தல் நடத்தும்போது தேர்தல் ஆணையத்திற்கும் நிச்சயமாக அதிகச் செலவுகள் ஏற்படும் என்றும் அவர் சொன்னார்.
முன்னதாக, தான் ஆட்சி செய்யும் கிளந்தான், திரெங்கானு, கெடா ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத்தைக் கலைக்கப் போவதில்லை என்று 'பாஸ்' கட்சி நேற்று முன்தினம் அறிவித்து விட்டது.
இதனிடையே, பாகாங், பெர்லிஸ் மாநிலங்களில் சட்டமன்றம் நேற்று கலைக்கப் பட்டுவிட்டதாக அம்மாநில முதல்வர்கள் அறிவித்தனர்.

