மூன்றாம் காலாண்டில் பொருளியல் 4.4% வளர்ச்சி

மூன்றாம் காலாண்டில் பொருளியல் 4.4% வளர்ச்சி

2 mins read

எதிர்பார்ப்பை விஞ்சியதால் மந்தநிலை ஏற்படாமல் தவிர்ப்பு

இவ்­வாண்­டின் மூன்­றாம் காலாண்­டில் சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் எதிர்­பார்ப்பை விஞ்சி, 4.4% வளர்ச்சி கண்­டது. இத­னால், பொரு­ளி­யல் மந்­த­நிலை ஏற்­ப­டு­வது தவிர்க்­கப்­பட்­டது.

இருப்­பி­னும், அடுத்து வரும் மாதங்­களில் பொரு­ளி­யல் நில­வ­ரம் ஏற்ற இறக்­க­மாக இருக்­க­லாம் என்று பொரு­ளி­யல் வல்­லு­நர்­கள் எச்­ச­ரித்­துள்­ள­னர்.

நான்­காம் காலாண்­டில் பொரு­ளி­யல் சுருங்­க­லாம் என்­றும் அடுத்த ஆண்­டில் வளர்ச்சி குறை­வா­கவே இருக்­க­லாம் என்­றும் பகுப்­பாய்­வாளர்­கள் எதிர்­பார்க்­கின்­ற­னர்.

ஆண்டு அடிப்­ப­டை­யில், கடந்த ஏப்­ரல்-ஜூன் மாதங்­களில் 4.5 விழுக்­கா­டாக இருந்த பொரு­ளியல் வளர்ச்சி, அத­னை­ய­டுத்த ஜூலை-செப்­டம்­பர் காலாண்­டில் 4.4% எனச் சற்றே மெது­வ­டைந்­தது.

ஆனா­லும், காலாண்டு அடிப்­படை­யில் பொரு­ளி­யல் 1.5% வளர்ச்சி கண்­ட­தால், பொரு­ளி­யல் மந்­த­நி­லைக்­குச் செல்­வது தவிர்க்­கப்­பட்­டது. முன்­ன­தாக, 2022 முதல் காலாண்­டை­விட இரண்­டாம் காலாண்­டில் பொரு­ளி­யல் 0.2% சரி­வு­கண்­டி­ருந்­தது.

தொடர்ந்து இரு காலாண்­டு­களா­கப் பொரு­ளி­யல் சுருங்­கும் பட்­சத்­தில் அது மந்­த­நி­லையை எட்­டி­விட்­ட­தா­கக் கரு­தப்­படும்.

மூன்­றாம் காலாண்­டிற்­கான முன்­னோ­டித் தர­வு­க­ளின் அடிப்­படை­யில், சிங்­கப்­பூ­ரின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி இவ்­வாண்­டின் முதல் மூன்று காலாண்­டு­களில் 4.3% வளர்ச்சி கண்­டுள்­ள­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

இத­னால், இவ்­வாண்­டிற்­கான ஒட்­டு­மொத்த பொரு­ளி­யல் வளர்ச்சி 3 முதல் 4 விழுக்­காட்­டிற்­குள் இருக்­கும் என்று பொரு­ளி­ய­லா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

முன்­ன­தாக, இவ்­வாண்­டில் நாட்­டின் பொரு­ளி­யல் 3% முதல் 5% வளர்ச்­சியை எட்டலாம் என்று கணித்தி­ருந்த வர்த்­தக, தொழில் அமைச்சு, பின்­னர் கடந்த ஆகஸ்ட் மாதத்­தில் அதனை 3%-4% எனக் குறைத்­து­விட்­டது.

சென்ற ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் 4.5 விழுக்­கா­டாக இருந்த தங்­கு­மி­டம், உணவு, நிர்­வா­கம் மற்­றும் ஆத­ரவு, சொத்­துச் சந்தை ஆகிய சேவை­கள் துறை­யின் வளர்ச்சி, இவ்­வாண்­டின் அதே காலாண்­டில் 9.2 விழுக்­கா­டாக உயர்ந்­தது. நடப்­பாண்­டின் இரண்­டாம் காலாண்­டில் அத்­து­றை­யின் வளர்ச்சி 7.6 விழுக்­கா­டா­கப் பதி­வா­னது.

ஒட்­டு­மொத்­தத்­தில், சேவை­கள் துறை 6.1% வளர்ச்சி கண்­டது. இரண்­டாம் காலாண்­டில் இந்த விகி­தம் 4.8 விழுக்­கா­டாக இருந்­தது.

அத்­து­றை­யின் எல்­லாப் பிரிவு­களும் வளர்ச்சி அடைந்­தன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

அதே நேரத்­தில், உற்­பத்­தித்­துறை­யின் வளர்ச்சி மெது­வ­டைந்­தது. ஆண்டு அடிப்­ப­டை­யில் பார்க்­கும்­போது, இரண்­டாம் காலாண்­டில் 5.7 விழுக்­கா­டாக இருந்த அத்­துறை­யின் வளர்ச்சி, மூன்­றாம் காலாண்­டில் 1.5 விழுக்­காட்­டிற்கு இறங்­கி­யது. காலாண்டு அடிப்­படை­யில் பார்க்­கை­யில், இரண்­டாம் காலாண்­டை­விட அத்­துறை 3.3% சுருங்­கி­யது.