காதல் விவகாரத்தில் ஆடவர் ஒருவர் ஓடும் ரயில்முன் இளம்பெண்ணைத் தள்ளிவிட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் நேற்று முன்தினம் நிகழ்ந்தது.
மகள் உயிரிழந்த அதிர்ச்சியில் அப்பெண்ணின் தந்தையும் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சென்னை ஆலந்தூரைச் சேர்ந்த மாணிக்கம், 47, ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றிவந்தார்.
அவருடைய மகள் சத்தியப் பிரியா, 20, தியாகராய நகரிலுள்ள ஒரு கல்லூரியில் 3ஆம் ஆண்டு பட்டக் கல்வி பயின்றுவந்தார்.
அவர்களது வீட்டிற்கு எதிரே ஓய்வுபெற்ற காவல்துறை துணை ஆய்வாளர் தயாளனின் குடும்பம் வசித்து வருகிறது. திரு தயாளனின் மகனான சதீஷ், 23, பட்டயக் கல்வி பயின்றுள்ளார்.
எதிர்வீட்டில் வசித்த சத்யாமீது சதீஷ் காதல் வயப்பட்டார். ஆனால், சத்யா அவரது காதலை ஏற்கவில்லை.
இருப்பினும், விடாமல் இரண்டு ஆண்டுகளாக அவரைப் பின்தொடர்வதை வாடிக்கையாக வைத்திருந்தார் சதீஷ். இதனை அடுத்து, சத்யாவின் குடும்பத்தினர் சதீஷ்மீது காவல்துறையில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து, இனிமேல் சத்யாவைத் தொந்தரவு செய்யக்கூடாது என எழுதி வாங்கிக்கொண்டு, காவல்துறை சதீஷை எச்சரித்து அனுப்பியது.
ஆயினும், தனக்குக் கிடைக்காத சத்யா வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று எண்ணிய சதீஷ், அவரை ரயில்முன் தள்ளிக் கொன்றுவிட முடிவுசெய்தார்.
அதன்படி, நேற்று முன் தினம் பிற்பகலில் பரங்கிமலை ரயில் நிலையத்திற்குத் தம் தோழியுடன் வந்த சத்யாவிடம் சென்று பேசினார் சதீஷ். ஆனால், சத்யா தன்னைக் கண்டுகொள்ளாததால் அவரை ஓடும் ரயில்முன் சதீஷ் தள்ளிவிட்டார். இதில் தலை துண்டாகி, சம்பவ இடத்திலேயே சத்யா இறந்துபோனார்.
அங்கிருந்து தப்பிய சதீஷ், நள்ளிரவு 1 மணியளவில் காவல்துறையிடம் பிடிபட்டார். இதனிடையே, மகள் இறந்த துக்கம் தாளாது, திரு மாணிக்கம் நேற்றுக் காலை நஞ்சருந்தி உயிரைவிட்டார்.

