புதிய கொவிட்-19 கிருமித்தொற்று அலை நவம்பர் நடுப்பகுதியில் உச்சத்தைத் தொடலாம்
இர்ஷாத் முஹம்மது
துணைச் செய்தி ஆசிரியர்
தற்போது பரவிவரும் கொவிட்-19 கிருமித்தொற்று உருமாறிய 'எக்ஸ்பிபி' வகையால் அதிகரித்துள்ளது. அடுத்த மாதம் நடுப்பகுதியில் இந்தத் தொற்று உச்சத்தைத் தொட்டு சராசரியாக தினசரி தொற்றுச் சம்பவங்கள் 15,000ஐ தொடும் சாத்தியம் உள்ளது.
முந்தைய தொற்று அலைகளின்படி ஆராய்ந்து பார்த்ததில், தற்போது அதிகரித்துவரும் தொற்றுச் சம்பவங்களைக் கையாள போதுமான சுகாதாரப் பராமரிப்பு திறன் உள்ளது என்று சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது.
இந்நிலையில் முகக்கவசம் அணிவதையோ தடுப்பூசி அடிப்படையிலான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளையோ தேவை ஏற்பட்டால் மீண்டும் செயல்படுத்தும் சாத்தியம் ஏற்படலாம் என்று அமைச்சு கூறியது. இம்மாதம் 10ஆம் தேதி இந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
பொது மருத்துவமனைகள் அவசரம் அல்லாத அனுமதிகளை ஒத்திவைப்பது உட்பட வெவ்வேறு வழிகளைக் கொண்டு கொவிட்-19 நோயாளிகளுக்காக மேலும் 200 படுக்கைகளை ஏற்படுத்தியுள்ளன என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
அடுத்த இரண்டு வாரங்களில் கொவிட்-19 நோயாளிகளுக்கென பொது மருத்துவமனைகளில் 800க்கும் மேற்பட்ட படுக்கைகள் இருக்கும். கொவிட்-19 பராமரிப்பு வளாகங்களில் மேலும் 800 படுக்கைகள் நவம்பர் மாதத்துக்குள் கட்டங்கட்டமாக ஏற்படுத்தப்படும்.
எக்ஸ்பிபி உருமாறிய கிருமியால் பரவும் தொற்று, குறுகிய காலத்தில் அதிக எண்ணிக்கையில் பரவக்கூடிய அலையாக இருக்கும் என்றும் மறுமுறை தொற்றுக்கு ஆளாவோரும் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
கடந்த 2020ஆம் ஆண்டு நோய்ப் பரவல் சூழலின் உச்சத்தில் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட நோய்ப் பரவல் முறியடிப்பு நடவடிக்கைகள் போன்ற நிலைக்கு போய்விடக்கூடாது என்ற வேட்கையில் சிங்கப்பூர் இருப்பதைச் சுட்டினார் அமைச்சர் ஓங்.
அனைவரும் தனிப்பட்ட முறையில் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ளும்படி அறிவுறுத்திய அவர், புதிய தொற்று அலை ஏற்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படியும் வலியுறுத்தினார்.
மூத்தோரும் எளிதில் நோய்வாய்ப்படும் அபாயம் உள்ளோரும் கூட்டம் அதிகம் இருக்கும் உட்புறங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்படுகிறது.
அவசர மருத்துவத் தேவைகளுக்கு மட்டுமே மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குச் செல்லுமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
பொது மருந்தகங்களிலும் பலதுறை மருந்தகங்களிலும் சுமையைக் குறைக்க, கொவிட்-19 தொற்று ஏற்பட்ட ஊழியர்களிடமிருந்து முதலாளிகள் மருத்துவச் சான்றிதழ் கோருவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கடந்த வாரத்தின் நடுப்பகுதி நிலவரப்படி மருத்துவமனைகளில் படுக்கைப் பிரிவுகள் 93% நிரம்பின.
கொவிட்-19 தொற்று அல்லது வேறு காரணங்களுக்காக மருத்துவமனை அனுமதி தேவைப்படுவோருக்கான தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, அவசரம் இல்லாத மருத்துவச் சேவையைக் குறைத்துக் கொள்ளுமாறு அனைத்து பொது மருத்துவமனைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவச் சேவை பிரிவு இயக்குநர் கென்னத் மாக் தெரிவித்தார்.

