சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மிக முக்கிய பேரவைக் கூட்டம் நேற்று தொடங்கியது. அதில் உரையாற்றிய சீன அதிபர் ஸி ஜின்பிங், கொவிட்-19க்கு எதிரான ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் போராட்டத்தைத் தற்காத்துப் பேசினார்.
தைவானை, சீன பெருநிலத்துடன் இணைக்கும் முயற்சிகளை முன்னெடுக்கப்போவதாக அவர் சூளுரைத்தார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவைக் கூட்டம் நேற்று பெய்ஜிங்கில் உள்ள மக்கள் மாமண்டபத்தில் தொடங்கியது. கட்சித் தலைவர்களும் ராணுவத் தலைவர்களுமாக சுமார் 2,300 பேர் அதில் கலந்துகொள்கிறார்கள்.
மாநாடு தொடங்கியதற்குப் பிறகு தனது ஐந்தாண்டுகால அரசியல் சாதனைகள் அடங்கிய அறிக்கையை முன்வைத்து அதிபர் உரையாற்றினார்.
கடந்த ஐந்தாண்டுகளில் ஏழ்மையை ஒழிப்பதிலும் தேசிய தற்காப்பை வலுப்படுத்துவதிலும் அரசதந்திர முயற்சிகளை முன்னெடுப்பதிலும் சாதித்தவற்றை அவர் எடுத்துக் கூறினார்.
"கடுமையான, சிக்கலான அனைத்துலக சூழ்நிலையை சீன மக்கள் மிகவும் செம்மையான முறையில் சமாளிக்க கட்சி தலைமை தாங்கி வழிநடத்தி இருக்கிறது.
"நாட்டுக்கு ஏற்படக்கூடிய பெரிய ஆபத்துகளைத் தவிர்த்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. சமூக முன்னேற்றத்தைச் சாதித்து இருக்கிறது," என்று அவர் கூறினார்.
சீனாவுக்கு மிக முக்கியமான ஒரு காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கூட்டம் நடப்பதாக அவர் தெரிவித்தார்.
உலகளாவிய அளவில் சீனாவின் ஆற்றல் கூடி இருக்கிறது. அதே நேரத்தில் ஆபத்தான புயல்களும் சூழ்ந்து வருகின்றன என்று அவர் எச்சரித்தார்.
"ஹாங்காங் மீதான பரந்த அளவிலான கட்டுப்பாட்டைச் சீனா சாதித்து இருக்கிறது. தைவான் பிரிவினைவாதம், தைவான் பிரச்சினையில் அந்நிய தலையீடு ஆகியவற்றுக்கு எதிரான பெரும் போராட்டத்தைச் சீனா சமாளித்து வருகிறது.
"தைவான் தொடர்பான முடிவு எது வுமே சீன மக்களைச் சார்ந்தது. தைவானை தேவைப்பட்டால் பலத்தைப் பயன்படுத்தி சீனா தன்னுடன் சேர்த்துக்கொள்ளும். இந்த உரிமையை அது ஒருபோதும் கைவிடாது," என்றாரவர்.
தைவானை தன்னிடம் இருந்து பிரிந்து செல்ல முயலும் தன் மாநிலமாக சீனா கருதுகிறது. தேவைப்பட்டால் படைபலத்தைப் பயன்படுத்தி தைவான் தன்னுடன் சேர்த்துக்கொள்ளப்படும் என்று அது தொடர்ந்து அறிவித்து வருகிறது.
கொவிட்-19 பிரச்சினை பற்றி கூறிய அதிபர் ஸி, மக்களின் உயிரை முக்கியமானதாகக் கருதி அரசாங்கம் செயல்பட்டு இருக்கிறது என்றார்.
நேற்றைய கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டத்தில் உயர்நிலைத் தலைவர்கள் முன் வரிசையில் அமர்ந்திருந்தனர். உச்ச ஆட்சிக் குழு உறுப்பினர்களும் கட்சித் தலைவர்களும் முதல் வரிசையில் அமர்ந்து அதிபரின் உரையைச் செவிமடுத்தனர்.
அந்த கம்யூனிஸ்ட் கூட்டத்தில் அதிபர் ஆற்றும் உரை, நாட்டின் கொள்கை முன்னுரிமைகள், பொருளியல், கொரோனா அணுகுமுறை, தைவான் தொடர்பான சீனாவின் கொள்கை, செல்வச்செழிப்பு, தொழில்நுட்ப முயற்சிகள் ஆகியவற்றுக்கான அடிப்படைகளை விவரிக்கிறது.
அடுத்த 10 ஆண்டுகளில் சீனாவின் முன்னேற்றத்திற்கான வழிகாட்டித் திட்டமாக அந்த உரையே இருக்கும் என்று நம்பப்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது மாநாட்டையொட்டி பெய்ஜிங் நகரில் பாதுகாப்பு அண்மைய சில வாரங்களாகவே பலப்படுத்தப்பட்டு இருந்தது.
இந்த ஒருவார கால மாநாட்டு முடிவில் அதிபர் ஸி, 3வது முறையாக கட்சியின் தலைமைச் செயலாளராகவும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏறக்குறைய 370 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் கட்சியின் மத்திய செயற்குழு தேர்வாகும். உச்ச ஆட்சிக் குழுவையும் மத்திய ராணுவ ஆணை யத்தையும் அந்தச் செயற்குழு தேர்ந்தெடுக்கும்.
'இறையாண்மையை விடமாட்டோம்'
தைவான், தன்னுடைய இறையாண்மையையோ, சுதந்திரத்தையோ, ஜனநாயகத்தையோ விட்டுக் கொடுக்காது என்று தைவானின் அதிபர் அலுவலகம் நேற்று தெரிவித்தது.
சீன அதிபர் ஸி ஜின்பிங் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் ஆற்றிய உரையை அடுத்து இந்த அறிவிப்பு இடம்பெற்றது.
தைவானைப் பொறுத்தவரை ஒரு நாடு, இரண்டு முறை என்ற ஏற்பாட்டை சீனா கடைப்பிடிக்கிறது. இதைத் தைவானிய மக்கள் தெள்ளத் தெளிவாக எதிர்க்கிறார்கள் என்றது அந்த அறிக்கை.
தைவான் நீரிணையிலும் இந்த வட்டாரத்திலும் அமைதி யையும் நிலைப்பாட்டையும் நிலைநாட்டி வருவது சீனா, தைவான் இரண்டின் பொறுப்பு.
இரு தரப்பும் போர்க் களத்தில் சந்திப்பதற்கான விருப்ப உரிமை எதுவும் இல்லை என்று அந்த அறிக்கை தெரிவித்தது.

