அமெரிக்க டாலர் வரலாறு காணாத அளவில் மதிப்பு உயர்ந்து வரும் நிலையில், இந்திய ரூபாய் உறுதியாக நிலைப்படுகிறது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்து இருக்கிறார்.
இந்தியப் பொருளியலின் அடிப்படை அம்சங்கள் வலுவாக இருப்பதாகவும் உலகின் இதர பகுதிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இந்தியாவில் பணவீக்கம் குறைவாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்துலக பண நிதியம், உலக வங்கி ஆகியவற்றின் ஆண்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றிருந்த அமைச்சர், வாஷிங்டனில் தமது பயண நிறை வில் செய்தியாளர்களிடம் பேசினார். இந்தியாவில் பணவீக்கம் சமாளிக்கக்கூடிய நிலையில் இருக்கிறது என்றார் அவர்.
"அடிப்படை அம்சங்கள் வலு வாக இருக்கின்றன. பரந்த அளவில் பார்க்கும்போது பொருளியல் தூண்கள் உறுதியாக உள்ளன. நாட்டின் அந்நியச் செலாவணி நல்ல நிலையில் இருக்கிறது. மீண்டும் இதையே கூறுகிறேன்.
"பணவீக்கமும் சமாளிக்கக்கூடிய அளவில்தான் இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
அனைத்துலக பண நிதியம், உலக வங்கி கூட்டங்களையொட்டி 24 இருதரப்பு சந்திப்புகளிலும் ஏறக்குறைய 12 பலதரப்புக் கூட்டங்களிலும் திருவாட்டி நிர்மலா கலந்துகொண்டார்.
இந்தியாவில் பணவீக்கத்தை 6%க்கு கீழாகக் குறைப்பதே தமது விருப்பம் என்றும் இதற்கான முயற்சிகளை அரசாங்கம் எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளி நிலவரங்கள் காரணமாக நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் கூறினார்.
"இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. இருந்தாலும் ஒவ்வொரு முறையும் குறித்த காலத்தில் இந்திய அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுப்பதால் நிலவரங்களைக் குறைந்தபட்சம் நிலைப்படுத்த முடிகிறது," என்றார் அவர். பணவீக்கத்தை 4%ஆக குறைக்க முயல்வதாக அவர் தெரிவித்தார்.
இந்திய ரூபாய் மதிப்பு கிடுகிடுவென சரிந்து வருவது பற்றி கருத்து கூறிய அமைச்சர், அமெரிக்க டாலர் வலுவடைவதே இதற்கான காரணம் என்றார்.
"எல்லா நாணயங்களின் மதிப்பும் குறைகின்றன. ஆனால், இந்திய ரூபாய் தாக்குப்பிடித்து நிற்கிறது. இதர பல புதிய சந்தை நாணயங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா எவ்வளவோ அருமையாக செயல்பட்டு இருக்கிறது," என்று அவர் தெரிவித்தார்.
இந்திய மத்திய வங்கியான ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா, சந்தையில் தலையிட்டு ரூபாயின் மதிப்பை நிர்ணயிக்க முயல்வதில்லை. ரூபாய் தனக்குரிய இடத்தை அதுவே பெற்று வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

