வெளிநாட்டில் வேலை செய்ய விரும்புவோர் கூடுதல் வாய்ப்பைப் பெற இருக்கின்றனர்.
இது தொடர்பான முன்னோடித் திட்டம் ஒன்று வேலைவாய்ப்பு மற்றும் வேலைத்தகுதி பயிற்சிக் கழகத்திற்கும் (e2i) சிங்கப்பூர் முதலாளிகள் சம்மேளனத்துக்கும் இடையில் உருவாகி உள்ளது.
தேசிய தொழிற்சங்க காங்கிரசின் ஓர் அங்கமான இந்தப் பயிற்சிக்கழகம் தேசிய முதலாளிகள் சம்மேளனத்துடன் செய்துகொண்டு உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்று உள்ளன.
அவற்றில் ஒன்றுதான் சிங்கப்பூரர்கள் வெளிநாட்டு வேலைபெற உதவிக்கரம் நீட்டும் முன்னோடித் திட்டம்.
கொவிட்-19 கொள்ளைநோயில் இருந்து சிங்கப்பூர் மீண்டுவரும் வேளையில் சிறந்த சம்பளம், வளமான வேலைவாய்ப்பு மற்றும் ஊழியர் நலன் ஆகிய அம்சங்களை ஒப்பந்தம் உள்ளடக்கி உள்ளது.
முன்னோடித் திட்டத்தின்கீழ், வேலைதேடுவோர், குறிப்பாக இள
வயது நிபுணர்கள், மேலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தில் உறுப்பினர்களாக உள்ளோரின் வெளிநாட்டு அலுவலகங்களில் பணியமர்த்தப்படுவர்.
வெளிநாட்டுச் சூழலுக்குப் பொருந்தும் வகையில் பலதிறன் பணிகளில் ஈடுபட்டு வேலை அனுபவங்களைப் பெற இந்த ஏற்பாடு அவர்களுக்கு உதவும்.
முன்னோடித் திட்டம் குறித்து விளக்கிய வேலைவாய்ப்பு மற்றும் வேலைத்தகுதி பயிற்சிக் கழக தலைமை நிர்வாகி கேரின் லிம், சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனத்தின் உறுப்பினர் நிறுவனங்களும் அவற்றின் ஊழியர்களும் வெளிப்படுத்திய ஆர்வத்தைத் தொடர்ந்து இத்திட்டம் உதயமானதாகக் கூறினார்.
தொடக்கமாக, ஆர்வத்தை வெளிப்படுத்திய சம்மேளனத்தில் உள்ள 5 முதல் 10 வரையிலான உறுப்பினர் நிறுவனங்கள் இத்திட்டத்திற்காகப் பரிசீலிக்கப்படும்.
இருப்பினும் திட்டம் எப்போது செயல்படத் தொடங்கும் என்பது குறித்த தகவல் இல்லை.
வேலைப் பாதுகாப்பு மன்றத்தின்கீழ் இந்த முன்னோடித் திட்டம் இயங்கும்.
2020 பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்ட இம்மன்றம், ஆட்குறைப்பு செய்யப்பட்ட ஊழியர்கள் நல்ல வேலைகளைப் பெற உதவும் நோக்கம் கொண்டிருந்தது.
இருப்பினும், கொவிட்-19 சூழல் காரணமாக பொருத்தமான வேலைதேடித் தரும் முயற்சிக்கு மன்றம் மாறியதாக திருவாட்டி லிம் குறிப்பிட்டார்.

