தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுக சாமியின் அறிக்கை சட்டமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மொத்தம் 608 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.
கடந்த 2016 டிசம்பர் 5ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக அவர் சிகிச்சை பெற்றுவந்த அப்போலோ மருத்துவமனை தெரிவித்திருந்தது. ஆனால், முதல்நாள் பிற்பகல் 3 - 3.30 மணிக்குள் அவர் இறந்துவிட்டதாகச் சாட்சியங்களின் அடிப்படையில் ஆறுமுகசாமி அறிக்கை கூறியுள்ளது.
அதனால், ஜெயலலிதாவின் மரண அறிவிப்பு திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோதும் அதன்பிறகு நடந்தவை அனைத்தும் சசிகலாவால் மறைக்கப்பட்டன என்று அவ்வறிக்கை சொல்கிறது.
அமெரிக்காவில் இருந்து வந்த டாக்டர் சமீன் சர்மா, ஜெயலலிதாவிற்கு இதய அறுவை சிகிச்சை செய்யப் பரிந்துரைத்திருந்தார். அதுபோல, டாக்டர் ரிச்சர்ட் பீலே உள்ளிட்ட மருத்துவர்கள் ஆஞ்சியோ சிகிச்சைக்குப் பரிந்துரைத்தும் ஜெயலலிதாவின் கடைசி மூச்சுவரை அது ஏன் நடக்கவில்லை என்று ஆணையம் கேள்வி எழுப்பி இருக்கிறது.
கடந்த 2012ஆம் ஆண்டிலிருந்து ஜெயலலிதா-சசிகலா இடையே சுமுக உறவு இல்லாததால் சசிகலா அதனைத் தடுத்திருக்கலாம் என்று அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், எய்ம்ஸ் மருத்துவக் குழு ஐந்துமுறை அப்போலோ மருத்துவமனைக்கு வந்தபோதும் ஜெயலலிதாவிற்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என்று அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, ஜெயலலிதா மரணம் தொடர்பில் சசிகலா, அவரின் உறவினர் டாக்டர் கே.எஸ்.சிவகுமார், முன்னாள் சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன் ராவ், அப்போலோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி உள்ளிட்ட எட்டுப் பேரிடம் விசாரணை நடத்த ஆணையம் பரிந்துரைத்தது.
அதனை ஏற்ற தமிழக அரசு, அவர்களை விசாரித்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறது.

