அகில இந்திய காங்கிரஸ் கட்சிக்கு மல்லிகார்ஜுன கார்கே, 80, தலைமையேற்க இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சித் தலைவருக்கான தேர்தலில் திரு கார்கே 84% வாக்குகளைப் பெற்றார். அவருக்கு 7,897 வாக்குகளும் எதிர்த்துப் போட்டியிட்ட திரு சசி தரூருக்கு 1,072 வாக்குகளும் கிடைத்தன. 416 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன.
இதையடுத்து, 24 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பத்தைச் சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சிக்குத் தலைவராகிறார். எஸ்.நிஜலிங்கப்பாவிற்குப்பின் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் கட்சித் தலைவராவது இதுவே முதன்முறை.
அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகும் முன்னரே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பின்போது திரு கார்கேயின் வெற்றியை உறுதிப்படுத்திவிட்டார்.
காங்கிரஸ் கட்சித் தலைவரின் பொறுப்புகள் குறித்துக் கேட்டபோது, அதுபற்றி திரு கார்கேதான் தெரிவிக்க வேண்டும் என்று கட்சியில் தமது பொறுப்பையும் அவரே முடிவுசெய்வார் என்றும் திரு ராகுல் கூறினார்.
தீபாவளிக்குப் பிறகு திரு கார்கே தலைமைப் பொறுப்பை ஏற்பார் என்று கட்சி வட்டாரங்கள் கூறின.
முன்னதாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் வாக்குப்பெட்டிகள் முறையாக மூடப்பட்டு, முத்திரையிடப்படவில்லை என்று திரு சசி தரூர், கட்சித் தேர்தல் குழுவிடம் முறையிட்டார். ஆயினும், புதிய தலைவராகும் திரு கார்கேக்கு வாழ்த்து தெரிவித்த அவர், கட்சியின் உண்மையான மறுமலர்ச்சி தொடங்கிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

