அதிகரித்துவரும் பிணைநிரல் (ரேன்சம்வேர்) அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் தொழில் நிறுவனங்களுக்கும் ஆய்வு, கல்வி நிலையங்களுக்கும் உதவ புதியபணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஏழாவது வருடாந்திர சிங்கப்பூர் அனைத்துலக இணைய வார நிகழ்வில் மூத்த அமைச்சர் டியோ சீ ஹியன் நேற்று இதனை அறிவித்தார்.
பிணைநிரல் எல்லாருக்கும் பொதுவான அச்சுறுத்தலாக விளங்குகிறது என்ற அவர், குறிப்பாக மோசமான இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைக் கொண்டுள்ள நிறுவனங்கள் அதனால் எளிதில் பாதிக்கப்படக்கூடும் என்றும் கூறினார்.
பிணைநிரல் குற்றவாளிகள் சந்தர்ப்பவாதிகளாகவும் நவீன தொழில்நுட்பங்களை அறிந்தவர்களாகவும் இருக்கலாம் என்று, தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு டியோ சொன்னார்.
கணினிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, அவற்றை முடக்கி, பணம் கொடுத்தால் மட்டுமே அவற்றை விடுவிக்க முடியும் என்று பிணைநிரல் குற்றவாளிகள் மிரட்டுவர்.
"அவர்கள், நிறுவனங்களின் கணினிக் கட்டமைப்புக்குள் ஊடுருவி, தரவுகளைப் பெற அவற்றின் மோசமான இணையப் பாதுகாப்பு நடைமுறைகளைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றனர். பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் பெரும்பாலும் அதுபற்றி புகாரளிக்காமல், தங்களை மிரட்டுவோர் கேட்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு, அதனை மறைத்துவிடவே விரும்புகின்றன. சட்ட அமலாக்கத்திலிருந்து தப்பிக்க அதிகார வரம்புகளுக்குள் இடையிலுள்ள இடைவெளிகளை அவை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கின்றன," என்று தொடக்க உரையை ஆற்றியபோது திரு டியோ தெரிவித்தார்.
புதிய 'பிணைநிரல் எதிர்ப்புப் பணிக்குழு' அந்த இடைவெளியை இணைக்க இலக்கு கொண்டு உள்ளது.
சிங்கப்பூரில் 2020-2021 காலகட்டத்தில் பிணைநிரல் தாக்குதல்களின் எண்ணிக்கை 54% அதிகரித்துவிட்டதாக சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.
இணையப் பாதுகாப்பு அமைப்பு, 'கவ்டெக்' எனப்படும் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பு, தகவல் தொழில்நுட்ப, ஊடக மேம்பாட்டு ஆணையம், தொடர்பு, தகவல் அமைச்சு, தற்காப்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, சிங்கப்பூர் நாணய ஆணையம், சிங்கப்பூர் ஆயுதப்படை, சிங்கப்பூர் காவல்படை ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் அந்தப் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
போக்குவரத்து, சுகாதாரப் பராமரிப்பு, எரிசக்தி உள்ளிட்ட இன்றியமையாத சேவைகளுக்கு ஆதரவளிக்கும் அதிமுக்கியத் தகவல் உட்கட்டமைப்பைப் பாதுகாக்கும் இணையப் பாதுகாப்பு அமைப்பின் நோக்க வரம்பைப் பணிக்குழு விரிவுபடுத்துகிறது.
புதிய அச்சுறுத்தல்களைக் கண்டறிதல், மோசடிப் பணப் பரிமாற்றத்தைத் தடுத்து நிறுத்துதல், பிணைநிரல் தாக்குதல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கைதுசெய்தல் போன்றவை தொடர்பில் வெளிநாடுகளுடன் இணைந்து அணுக்கமாகப் பணி ஆற்றுவது குறித்து புதிய பணிக்குழு ஆராயும்.
பிணைநிரல் அச்சுறுத்தலை எதிர்கொள்வதில் சிங்கப்பூரின் திறனை மேம்படுத்தும் நோக்கில் கொள்கைகளையும் செயல்திட்டங்களையும் நடவடிக்கைகளையும் அப்பணிக்குழு உருவாக்கி, பரிந்துரைக்கும் என்று இணையப் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்தது.
சிங்கப்பூரின் இணையத் தற்காப்பானது, தொலைத்தொடர்பு வன்பொருள்கள் மற்றும் கம்பிவடங்கள், சிங்பாஸ், பேநவ் போன்ற மென்பொருள்கள், இன்றிமையாத சேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் அதிமுக்கியத் தகவல் உள்கட்டமைப்பு, தனிமனிதப் பயன்பாட்டுக் கருவிகள் ஆகிய நான்கையும் உள்ளடக்கும் என்று மூத்த அமைச்சர் டியோ விவரித்தார்.
முன்னதாக, நேற்று முன்தினம் புதியதொரு இணையநல இணையவாயில் அறிவிக்கப்பட்டது. தங்களது இணையத்தளங்கள், பயனாளர்களுக்கு எந்த அளவிற்குப் பாதுகாப்பாக உள்ளன என நிறுவனங்கள் மதிப்பிடுவதற்கு அந்த இணையவாயில் உதவும்.
'ஆசியாவில் அதிக அச்சுறுத்தல்'
இதற்கிடையே, அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இணையப் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சர் அலெஹாண்ட்ரோ மயோர்க்காஸ் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா, சீனா, வடகொரியா, ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து திரு மயோர்க்காஸ் எச்சரித்து இருக்கிறார்.
"சீனாவில் இடம்பெறும் தீங்கு நடவடிக்கைகள், அமெரிக்காவிற்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் உண்மையான அச்சுறுத்தலாக விளங்குகின்றன. அதனால்தான் நான் இவ்வளவு தொலைவு பயணம் செய்து, சிங்கப்பூர் வந்துள்ளேன்," என்று புளூம்பெர்க் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின்போது அவர் கூறினார்.

