பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணைக் கடத்திச் சென்ற கும்பல்; பள்ளி முதல்வரின் அறைக்கு எதிரிலேயே சிறுமி சீரழிப்பு
இந்தியாவில் நிகழ்ந்த இருவேறு பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.
டெல்லியைச் சேர்ந்த 36 வயதுப் பெண் ஒருவரை காஸியாபாத்தில் கடத்திய ஐவர் கும்பல், அவரை இரண்டு நாள்களாகக் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தியது.
அத்துடன், அவரது பிறப்புறுப்பில் இரும்புக் கம்பியைச் செருகி, ரத்த வெள்ளத்துடன் அவரைச் சாக்கு மூட்டையில் கட்டி, சாலை ஓரமாக வீசிவிட்டுச் சென்றது.
பிறந்தநாள் விழாவில் கலந்துகொள்வதற்காக காஸியாபாத் சென்றிருந்த அப்பெண், பின்னர் டெல்லி திரும்புவதற்காக அங்குள்ள பேருந்து நிலையத்தில் காத்திருந்தார்.
அப்போது, காரில் வந்த ஒரு கும்பல், அவரை ஆளரவமற்ற இடத்திற்குக் கடத்திச் சென்று, வன்புணர்வு செய்ததாகக் கூறப்படுகிறது.
அந்த ஐவரையும் அப்பெண்ணுக்கு முன்னரே தெரியும் என்றும் சொல்லப்பட்டது. அவர்களில் நால்வரைக் கைதுசெய்துவிட்டதாக காவல்துறை தெரிவித்தது.
"சொத்துப் பிரச்சினை காரணமாக இந்தக் குற்றம் அரங்கேறிஉள்ளது," என்று காஸியாபாத் காவல்துறைக் கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் கூறினார்.
அந்தப் பெண் கடுமையாக துன்புறுத்தப்பட்டதாகவும் அவரது உடல்நிலை மோசமாக இருப்பதாகவும் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவர் சுவாதி மலிவால் முன்னதாக 'டுவீட்' செய்திருந்தார்.
பள்ளி முதல்வரின் ஓட்டுநர் கைது
இதற்கிடையே, தெலுங்கானாவின் ஹைதராபாத் நகரில் நான்கே வயதான சிறுமியை, ஆடவர் ஒருவர் இரண்டு மாதங்களாகப் பாலியல் கொடுமைக்குள்ளாக்கியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அந்த ஆடவர், 'பிஎஸ்டி டிஏவி பொதுப் பள்ளி' என்ற கல்வி நிலைய முதல்வரின் ஓட்டுநர் எனக் கூறப்பட்டது.
அவன் கடந்த திங்கட்கிழமை பள்ளியில் முதல்வரின் அறைக்கு எதிரே இருக்கும் ஆய்வுக்கூடத்திற்குள் அச்சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் பின்னர் அவள் கழுத்தை நெரித்தபடி, எவரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியதாகவும் சொல்லப்பட்டது.
இரு மாதங்களாகவே தங்கள் மகள் ஒரு மாதிரியாக இருப்பதை அவளின் பெற்றோர் கண்டனர். கடந்த திங்கட்கிழமை அச்சிறுமியின் தாயார், தன் மகளிடம் வற்புறுத்திக் கேட்கவே, அவள் நடந்ததைக் கூறினாள்.
மறுநாள் செவ்வாய்க்கிழமை பள்ளிக்கு அழைத்துச் சென்றபோது ரஜினிகுமார் என்ற அந்த ஆடவரை அவள் அடையாளம் காட்டினாள். அதனைத் தொடர்ந்து காவல்துறையிடம் அவளின் பெற்றோர் புகாரளிக்க, அன்றே ரஜினிகுமார் கைதுசெய்யப்பட்டான்.
அவன்மீது மற்ற குழந்தைகளின் பெற்றோரும் பள்ளி முதல்வரிடம் இதற்குமுன் புகார் அளித்திருப்பதாக காவல்துறை தெரிவித்தது. அதனால், வேறு எவரையும் அவன் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தினானா என்று காவல்துறை விசாரித்து வருகிறது.
ரஜினியைக் கைதுசெய்தபோது மற்ற குழந்தைகளின் பெற்றோர்அவனுக்குச் சரமாரியாகக் குத்து விட்டனர். அவனுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் முழக்கமிட்டனர்.