ரெட் ஸ்வாஸ்திகா பள்ளிக்கு வெளியே 62 வயது பாதுகாவலர்மீது காரை ஏற்றிவிடுவதாக மிரட்டிய பென்ட்லி கார் ஓட்டுநருக்கு எட்டு வாரச் சிறைத் தண்டனையும் $600 அபராதமும் விதிக்கப்பட்டது.
நியோ ஹோங் சாய், 61, என்ற இந்த ஆடவர், 12 மாதங்களுக்கு அனைத்துவகை வாகன ஓட்டுநர் உரிமங்களை வைத்திருக்கவும் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
கண்மூடித்தனமாக நடந்துகொண்டு, இன்னொருவரைக் காயப்படுத்திய குற்றத்தை நியோ நீதிமன்றத்தில் நேற்று ஒப்புக்கொண்டார். அதற்காக, அவருக்குச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அத்துடன், காப்புறுதி இல்லாமல் வாகனத்தை ஓட்டிய குற்றச்சாட்டையும் இவர் ஒப்புக்கொண்டார்.
இவ்வாண்டு ஜனவரி 11ஆம் தேதி தம் பேத்தியை காரில் ஏற்றிக்கொண்டு, அப்பள்ளிக்குச் சென்றார் நியோ. பள்ளிக்குள் செல்வதற்காக சாலையின் இடது தடத்தில் தமக்கு முன்னே பல கார்கள் நின்று இருந்தபோதும், அவற்றையெல்லாம் முந்திக்கொண்டு இரண்டாவது தடத்திலிருந்து பள்ளிக்குள் செல்ல முற்பட்டார் நியோ.
ஆனால், நுழைவாயிலில் நின்று இருந்த பாதுகாவலர் அவரைத் தடுத்து நிறுத்தி, பக்கவாயில் வழியாகச் செல்லும்படி அவரை அறிவுறுத்தினார்.
ஆனாலும் அதற்குச் செவிசாய்க்காத நியோ, தமது காரை சற்று முன்னே செலுத்தி அந்தப் பாதுகாவலர்மீது மோதச் செய்தார்.
பின்னர் காரிலிருந்து இறங்கிய நியோ, தான் ஏன் அவ்வழியே நுழையக்கூடாது என்று கேட்டார்.
அதற்கு, அவர் வரிசையில் வரவில்லை என்ற அப்பாதுகாவலர், பக்கவாயில் வழியாகச் செல்லும்படி மீண்டும் அவரிடம் அறிவுறுத்தினார். அதனையடுத்து, தமது காரில் ஏறிய நியோ, முன்னால் நின்றிருந்த அப்பாதுகாவலர்மீது மீண்டும் காரால் இடித்ததாகச் சொல்லப்பட்டது. அதனால் அப்பாதுகாவலர் பின்னோக்கித் தடுமாறினார்.
பின்னர் அவர் ஒதுங்கிக்கொள்ள, நியோ பள்ளி வளாகத்திற்குள் சென்றார்.
கார் இடித்ததால் அந்தப் பாதுகாவலருக்கு முழங்காலில் நசிவு ஏற்பட்டதாகவும் அதனால் அவர் மூன்று நாள்கள் மருத்துவ விடுப்பில் இருக்க நேர்ந்ததாகவும் கூறப்பட்டது.
அப்பாதுகாவலர் மற்றும் சுற்றி இருந்த நடையர்களின் பாதுகாப்பை அலட்சியப்படுத்தும் வகையில் நியோ கண்மூடித்தனமாகவும் போர்க்குணத்துடனும் நடந்துகொண்டதாக அரசுத் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.
ஆனால், அந்தச் சம்பவத்திற்காக தமது கட்சிக்காரர் வருந்துகிறார் என்றும் அதன்பிறகு ஒருநாள்கூட அவர் நிம்மதியாக உறங்கவில்லை என்றும் நியோ சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ஜான் லிம் தெரிவித்தார்.
அத்துடன், நியோ முதன்முறையாகத் தம் பேத்தியை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றதால், அவ்வழி குறித்து அவர் சரியாக அறிந்திருக்கவில்லை என்றும் திரு லிம் சொன்னார்.
மகன்மீதும் குற்றச்சாட்டு
இதற்கிடையே, தமது பென்ட்லி காரின் உரிமத் தகட்டு எண்ணை மாற்றி, காப்புறுதி இல்லாமல் தம் தந்தையை வாகனமோட்ட அனுமதித்ததாக நியோவின் மகன் கிளின் நியோ ஜியா, 28, மீது கடந்த மே மாதம் நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்பட்டது.
ஆனால், புகைப்படம் எடுக்கும் நோக்கங்களுக்காக தமது காரின் உரிம எண்ணை ஜியா மாற்றினார் என்று நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது. அவர்மீதான வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

