குற்றவியல் சட்டப் பிரிவு 377Aஐ ரத்து செய்வதற்கான ஒரு மசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஆண்களுக்கிடையில் பாலியல் உறவு கொள்வதை அந்தப் பிரிவு குற்றம் என்று வரையறுக்கிறது. காலனித்துவ காலத்திலிருந்து நடப்பிலிருந்து வரும் ஒரு நடைமுறை இதன்மூலம் முடிவுக்கு வருகிறது.
அதேநேரத்தில் திருமணம் என்பதை வரையறுக்க இப்போது நடப்பில் இருக்கும் வரைமுறையைப் பாதுகாக்கவும், இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள அரசாங்கக் கொள்கைகள் நீதிமன்றத்தில் எதிர்க்கப்படுவதில் இருந்து பாதுகாக்கவும் அரசமைப்புச் சட்டத்தில் மாற்றம் செய்வதற்கான மசோதாவும் நேற்று மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
வரும் நவம்பர் 28ஆம் தேதி நாடாளுமன்றம் கூடும்போது இந்த இரு மசோதாக்களும் ஒன்றாக விவாதிக்கப்படும். பின்னர் இரு மசோதாக்கள் மீதும் தனித்தனியாக வாக்களிப்பு இடம்பெறும்.
ஏனெனில், ஒரு சட்டத்தை ரத்து செய்ய குறைவான பெரும்பான்மை போதும். அதே நேரத்தில் அரசியலமைப்பில் எந்தவொரு திருத்தத்தை மேற்கொள்ளவும் நியமன உறுப்பினர்களைத் தவிர்த்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கினரின் ஆதரவு வேண்டும்.
ஓரினச் சேர்க்கை தொடர்பான மனப்போக்கு மாறிவிட்டதால் சிங்கப்பூரில் 377A சட்டப் பிரிவு நீக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தமது தேசிய தினப் பேரணி உரையில் அறிவித்ததை அடுத்து, சட்ட, உள்துறை அமைச்சர் கா. சண்முகம் நாடாளுமன்றத்தில் குற்றவியல் சட்டத் திருத்த மசோதாவைத் தாக்கல் செய்தார்.
377A பிரிவு தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டால் அது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரான ஒன்று எனக்கூறி நிராகரிக்கும் அபாயம் உள்ளது. அத்துடன், அனைவருக்கும் சமமான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு 12க்கு எதிரானது என்று கூறவும் வாய்ப்புள்ளது என்று பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.
மேலும், 377A பிரிவு மீட்டுக்கொள்ளப்படுவதால் சமுதாய நடைமுறைகளில் பெரிய மாற்றங்கள் ஏற்படுவதை பெரும்பாலான சிங்கப்பூரர்கள் விரும்பவில்லை என்பதை அரசாங்கம் பொதுமக்களுடன் மேற்கொண்ட ஆலோசனைகளில் தெரியவந்ததாக பிரதமர் கூறினார். திருமணம் என்பதன் வரையறை, பள்ளிகளில் என்ன கற்பிக்கப்படுகிறது என்பன உள்ளிட்டவை இந்த ஆலோசனைகளில் இடம்பெற்றன.
அரசியலமைப்புச் சட்டம் என்பது நாட்டின் மிக உயர்ந்த சட்டம் என்பதால், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் எந்தவொரு சட்டமும் அதற்கு முரணாக இருந்தால் நீதிமன்றங்கள் அதை நிராகரித்து விடும்.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி தாக்கல் செய்த மசோதா திருமணம் என்பதை வரையறைக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக புதிய அரசியல் சட்டப்பிரிவு 156ஐ (திருமணம் எனும் வழக்கமுறை) அறிமுகப்படுத்தும். இந்த வரையறையின் அடிப்படையில் நாடாளுமன்றம் திருமணம் என்பதை வரையறுப்பதுடன், குடும்பம் தொடர்பான சட்டங்களை வகுக்கலாம் என்று மசோதா குறிப்பிடுகிறது.
அரசாங்கமும் பொதுத்துறை அதிகாரிகளும் திருமணத்தைப் பாதுகாக்கும், ஆதரிக்கும், ஊக்குவிக்கும் கொள்கைகளை நடைமுறைப்படுத்தலாம் என்றும் உத்தேசத் திருத்தங்கள் கூறுகின்றன.
இந்த திருத்தமானது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான பந்தமாக திருமணத்தை வரையறுக்கும் தற்போதுள்ள சட்டங்களையும் அது தொடர்பான கொள்கைகளையும் பாதுகாக்கிறது. மேலும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான பிரிவு 12 போன்றவற்றை அவை மீறுவதாக நீதிமன்றங்கள் நிராகரிப்பதிலிருந்தும் தடுக்கிறது.
எடுத்துக்காட்டாக பொது வீடமைப்பு, திருமணமான தம்பதிகள் நிதி நன்மைகளைப் பெறுவது, திருமணத்தை ஊக்குவித்து பாதுகாக்கும் கல்வி மற்றும் ஊடகக் கொள்கைகள் போன்றவை இத்தகைய கொள்கைகள் என மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் பின்னர் உள்துறை அமைச்சும் சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சும் ஒரு கூட்டறிக்கை மூலம் தெரிவித்தன.
இந்தத் திருத்தம் நிறைவேறினால் திருமணம் என்பதன் வரையறையிலும் அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட சட்டங்களிலும் நாடாளுமன்றத்தின் மூலமே மாற்றம் செய்ய முடியும், நீதிமன்றங்கள் மூலம் அல்ல என்றும் அறிக்கை குறிப்பிட்டது. மேலும், இந்த மசோதாவானது திருமணத்தின் வரையறையை அரசியலமைப்புச் சட்டத்தில் ஒரு பிரிவாக்கவில்லை என்றும் அது சுட்டியது.
சட்டப் பிரிவு 377Aஐ ரத்து செய்வது குறித்த நாடாளுமன்ற வாக்களிப்பின்போது மக்கள் செயல் கட்சி கொறடாவை அகற்றாது என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் முன்பு கூறியிருந்தார். அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் நிலைப்பாட்டின்படி வாக்களிக்க வேண்டும்.
அதையடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் விருப்பப்படி சுதந்திரமாக வாக்களிக்க கொறடா அகற்றப்பட வேண்டும் என்ற சில பிரிவினர் கேட்டனர்.
சட்டத்தை ரத்து செய்வது பொதுக் கொள்கை விவகாரம். "இந்தச் சட்டம் ரத்து செய்யப்படுகிறது என்றாலும் அது மேலும் சமூக மாற்றங்களைத் தூண்டிவிடாது இருப்பதை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்கிறோம்," என்று அவர் அப்போது கூறியிருந்தார்.

