பிரிட்டிஷ் பிரதமர் பதவியைக் கைப்பற்ற போட்டா போட்டி; அடுத்த வாரம் முடிவு தெரியும்
அடுத்த பிரிட்டிஷ் பிரதமருக்கான போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனும் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கும் முன்னணியில் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், பலரும் ஆதரவைத் திரட்டி வருகின்றனர்.
பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்ற கிட்டத்தட்ட ஆறுவார காலமே ஆனநிலையில், திருவாட்டி லிஸ் டிரஸ் நேற்று முன்தினம் அப்பொறுப்பிலிருந்து விலகினார்.
அடுத்த பொதுத் தேர்தலில் கன்சர்வேட்டிவ் கட்சி படுதோல்வி அடையும் என கருத்துக்கணிப்பு கூறிவரும் நிலையில், ஆறாண்டுகளில் ஐந்தாவது பிரதமருக்கான போட்டி வேகமெடுத்துள்ளது.
அடுத்த பிரதமர் யார் என்பது அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் அறிவிக்கப்படும்.
இந்நிலையில், மூன்று மாதங்களுக்குமுன் பிரதமர் பதவியில் இருந்து விலகிய போரிஸ் ஜான்சன், மீண்டும் அப்பதவியைக் கைப்பற்றும் முனைப்புடன் இறங்கியுள்ளார்.
கடந்தமுறை லிஸ் டிரஸ்ஸிடம் அவ்வாய்ப்பை இழந்த திரு சுனக், திரு ஜான்சனுக்குக் கடும் சவாலாக விளங்குவார் எனச் சொல்லப்படுகிறது.
"நிலைமையைத் தமக்குச் சாதகமாக மாற்றும் வித்தையை அறிந்தவர் திரு ஜான்சன். இம்முறையும் அவர் அதை நிகழ்த்திக்காட்ட முடியும். அத்துடன், தொழிலாளர் கட்சியினர் கண்டு அஞ்சுபவராகவும் அவர் திகழ்கிறார். திரு ஜான்சனால் அடுத்த பொதுத் தேர்தலிலும் வெல்ல முடியும்," என்றார் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான பால் பிரிஸ்டோ.
ஆனாலும், திரு ஜான்சன் போட்டிக்குத் தகுதிபெற தேவையான நூறு வாக்குகளைப் பெறுவது அவ்வளவு எளிதாக இராது என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில், முறைகேடுகளாலும் ஒழுங்கீனக் குற்றச்சாட்டுகளாலும் அவரது மூன்றாண்டு காலப் பிரதமர் பதவி முடிவிற்கு வந்தது.
அந்த மூன்றாண்டு காலத்தில் சக கட்சி உறுப்பினர்கள் பலரும் அவரைவிட்டு விலகிப் போய்விட்டதால் இம்முறை அவருக்குப் பெரும்பான்மை ஆதரவு கிடைக்காது என்று பெயர் வெளியிட விரும்பாத, அவரது முன்னாள் ஆலோசகர்களில் ஒருவர் கூறினார்.
இதனிடையே, திரு ஜான்சன் விடுமுறையில் இருந்து திரும்பி, ஆதரவு திரட்டும் பணியைத் தொடங்கிவிட்டார் என்று அவரது முன்னாள் உதவியாளர் திரு வில் வால்டன் தெரிவித்தார்.
இருப்பினும், இம்முறை திரு சுனக்கிற்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்பது சூதாட்டத் தரகர்களின் கணிப்பு.
முன்னாள் தற்காப்பு அமைச்சரும் கன்சர்வேட்டிவ் கட்சியினர் இடையே செல்வாக்கு பெற்றவருமான திருவாட்டி பென்னி மோர்டான்டும் பிரதமர் பதவிக்கான போட்டியில் உள்ளனர்.
ஆயினும், பிரதமர் பதவிக்கான களத்தில் தாங்கள் இருப்பதாக இன்னும் ஒருவர்கூட அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

