மலேசியர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்காக சொந்த ஊர் திரும்புவதை ஊக்குவிக்கும் நோக்கில், மலேசிய ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் 20% பயணக் கட்டணக்கழிவு வழங்கப்படும் என அறிவித்து இருக்கிறது.
மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நவம்பர் 11ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதிவரை இந்தக் கட்டணச் சலுகை வழங்கப்படும்.
பல வழித்தடங்களிலும் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் கூடுதலாக 16 விமானங்கள் இயக்கப்படும் என்றும் 16 உள்ளூர் சேவைகளில் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் ஏ330 விமானங்கள் இயக்கப்படும் என்றும் மலேசிய ஏர்லைன்ஸ் தெரிவித்தது.
இதற்கிடையே, விமான நிறுவனங்கள் கட்டணத்தை உயர்த்தாமல் இருப்பது உறுதி செய்யப்படும் என்று மலேசிய விமானத் துறை ஆணையம் தெரிவித்து இருக்கிறது.
முன்னதாக, பொதுத் தேர்தல் அறிவிப்பையடுத்து, விமானப் பயணச்சீட்டுக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக ஊடகங்கள் வழியாக மலேசியர்கள் பலர் புகார் கூறியிருந்தனர்.
இதனிடையே, நவம்பர் 17ஆம் தேதி முதல் 20ஆம் தேதிவரை சுபாங்-பினாங்கு இடையே கூடுதலாக 70 விமானங்கள் இயக்கப்படும் என்றும் 24% வரை கட்டணக் கழிவு வழங்கப்படும் என்றும் ஃபயர்ஃபிளை நிறுவனம் அறிவித்திருக்கிறது.

