சிங்கப்பூரில் அண்மையில் கொவிட்-19 அலை தலைதூக்கியுள்ளதைத் அடுத்து, மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய மனிதவளங்களும் இதர வளங்களும் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் சுகாதார அமைச்சுடன் சேர்ந்து பொது மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளை நாடி வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வந்துள்ளது என்று தேசிய சுகாதாரப் பராமரிப்புக் குழுமம், தேசிய பல்கலைக்கழக சுகாதார முறை, சிங்ஹெல்த் ஆகிய மூன்று சுகாதாரப் பராமரிப்புக் குழுமங்களும் நேற்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவித்தன.
சூழ்நிலையை மருத்துவமனைகள் அணுக்கமாகக் கண்காணித்து வருகின்றன. கொவிட்-19 நோயாளிகளையும் மற்ற நோயாளிகளையும் திறம்பட கவனிக்க ஏதுவாக அவை தங்கள் செயல்முறைகளை மாற்றி அமைத்துக்கொள்கின்றன.

