தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்து, ரயில் சேவைகள்
தீபாவளிப் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடச் செல்லும் பொதுமக்கள் வசதிக்காக தமிழகம் முழுவதும் நேற்று முன்தினத்தில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னையில் ஆறு பேருந்து நிலையங்களில் இருந்து இத்தகைய 4,128 சிறப்புப் பேருந்துகள் சேவை வழங்குகின்றன. நேற்று முன்தினம் காலையில் இருந்தே கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் நிரம்பியது.
பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க, போக்குவரத்துக் கழகங்கள் விரிவான ஏற்பாடுகளைச் செய்துள்ளன. நடைமேடைகளில் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. ஒலிபெருக்கி மூலம் பயணிகளுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
அவரவர் செல்லும் பகுதிக்கான பேருந்தில் இடம் இருக்கிறதா என்பதைப் பார்த்துச் சொல்ல கணினித் தகவல் மையம் நிறுவப்பட்டுள்ளது.
சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை, கோவை, கும்பகோணம் ஆகிய பகுதிகளின் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கோயம்பேட்டில் பணியில் ஈடுபட்டு, சிறப்புப் பேருந்துப் பயணிகளுக்கு வழிகாட்டி உதவினர்.
நேற்று முன்தினம் மட்டும் அரசுப் பேருந்துகளில் ஒரு லட்சத்து 66 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் சென்று உள்ளனர். மேலும் 500க்கும் மேற்பட்ட சிறிய ரகப் பேருந்துகளில் 30,000 பேர் வெளியூர் சென்றனர்.
தமிழகத்தின் பல்வேறு நகரங்களை இணைக்கும் விதத்தில் இம்மாதம் 21, 22, 23 ஆகிய தேதிகளில் கிட்டத்தட்ட 16,000 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
தீபாவளியை முன்னிட்டு தென்னக ரயில்வேயின் சிறப்பு ரயில் சேவைகளும் பயணிகளுக்கு சேவை வழங்குகின்றன.
இவ்வேளையில், சிறப்புப் பேருந்து, ரயில் சேவைகளில் இடம் கிடைக்காத பலரும் உள்நாட்டு விமானச் சேவைகளை நாடியிருப்பதாகத் தகவல்கள் கூறுகின்றன. இதனால் உள்நாட்டு விமானக் கட்டணம் உயர்ந்திருப்பதாகத் தெரியவந்துள்ளது.
சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள், பெரும்பாலும் விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்குச் செல்லும் விமானக் கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளன. மற்ற மாநிலங்களுக்கும் தமிழகத்தின் மற்ற ஊர்களுக்கும் செல்வதற்கான விமானக் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் தீபாவளியை சொந்த ஊரில் கொண்டாடும் ஆர்வத்தில் மக்கள் கட்டண உயர்வைப் பொருட்படுத்தவில்லை என்று ஊடகங்கள் கூறுகின்றன.

