மலேசியாவில் அடுத்த மாதம் 19ஆம் தேதி நடைபெறும் 15ஆவது பொதுத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, உயர்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஐந்து நாள் விடுமுறை அளிக்கப்படவுள்ளது.
மலேசிய உயர்கல்வி அமைச்சு இதற்கு இணங்கியிருப்பதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.
அரசு, தனியார் என இருதரப்பு உயர்கல்வி நிலையங்களுக்கும் இது பொருந்தும். இதுகுறித்து பலதுறைத் தொழிற்கல்லூரிகள், சமூகக் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து உயர்கல்வி நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருப்பதாக மலேசிய உயர்கல்வித் துறை தலைமை இயக்குநர் ஹுசைனி ஒமார் உறுதிசெய்தார்.
'உண்டி18' இயக்கத்தின் அடிப்படையில் உயர்கல்வி மாணவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களிக்க ஏதுவாக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
'உண்டி18' என்பது மலேசியாவில் வாக்களிப்பு வயதை 21லிருந்து 18க்குக் குறைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட இயக்கம். அந்நாட்டில் தானியக்க வாக்காளர் பதிவுமுறை நடப்பில் உள்ளது.
எனவே, 18 முதல் 20 வயதான இளையர்கள் இவ்வாண்டுப் பொதுத் தேர்தலில் முதல்முறையாக வாக்களிக்கவுள்ளனர்.
உயர்கல்வித் துறையின் சுற்றறிக்கையில், அடுத்த மாதம் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதிவரை மாணவர்களுக்கு விடுப்பு அளிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று வாக்களித்துத் திரும்புவதற்கு இந்த கால அவகாசம் போதுமானதாயிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஐந்து நாள்களில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து வகுப்புகளும் நடவடிக்கைகளும் வேறு தேதிக்கு மாற்றப்படும் என்றும் நேற்று முன்தினம் தேதியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இவ்வேளையில், வாக்களிப்பு நாளான அடுத்த மாதம் 19ஆம் தேதி, வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் ஊழியர்களுக்கு வாக்களிக்க நேரம் ஒதுக்கித் தரும்படி வணிகக் குழுமங்கள் முதலாளிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
சட்டரீதியாக ஊழியர்கள் வாக்களிப்பதற்கு நேரம் வகுத்துத் தரும்படி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தவிருப்பதாக மலேசிய உற்பத்தியாளர் கூட்டமைப்பின் தலைவர் சோ தியன் லாய் கூறிஉள்ளார்.
மலேசியாவில் தேர்தல் குற்றங்கள் தொடர்பான சட்டத்தின்கீழ், ஒவ்வொரு நிறுவனமும் அதன் ஊழியர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தேவைப்படும் நேரத்தை ஒதுக்கித் தருவது கட்டாயம். இதற்கு ஈடாக ஊழியரின் சம்பளத்தைக் குறைப்பதோ வாக்களிக்கத் தேவையான நேரத்தில், பணியாற்றாமைக்காக அபராதம் விதிப்பதோ கூடாது என்பதை அவர் சுட்டினார்.
இம்மாதம் 18ஆம் தேதி மலேசிய மனிதவள அமைச்சர் எம். சரவணன், "வாக்களிப்பு நாள் வேலைநாளாக இருப்பின் ஊழியர்கள் வாக்களிக்க உதவும் வகையில் விடுப்பு அளிப்பது அல்லது நேரம் ஒதுக்கித் தருவது அவசியம்," என்று கூறியிருந்தார்.
அரசாங்கத்தின் இந்த விதிமுறையை மீறும் நிறுவனங்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

