பிரிட்டனின் அடுத்த பிரதமராவதற்கான போட்டியில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக்கிற்கான ஆதரவு வலுத்துவருகிறது.
கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்தான் நாட்டின் அடுத்த பிரதமர் ஆக முடியும்.
திரு சுனக் இன்னும் தாம் போட்டியிடப்போவதாக அறிவிக்கவில்லை. இருப்பினும் அவரை ஆதரிப்பதாக 100க்கும் மேற்பட்ட கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கரீபியன் தீவுகளுக்கு குடும்பத்துடன் விடுமுறைக்குச் சென்றிருந்த முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் தாயகம் திரும்பியுள்ளார். அவரும் கட்சித் தலைமைப் பதவிக்குப் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கட்சித் தலைவர் பதவிக்கு கன்சர்வேட்டிவ் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே போட்டியிட முடியும். ஏனெனில் போட்டியிடுபவருக்குக் குறைந்தது 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அவசியம்.
அக்கட்சியில் மொத்தம் 357 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். தேவைப்படும் 100 உறுப்பினர்களின் ஆதரவை முதலில் பெற்றுள்ளவர் திரு ரிஷி சுனக்.
பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் கீழவைத் தலைவர் திருவாட்டி பென்னி மோர்டாண்ட் தாம் இம்முறை போட்டியிடப் போவதாகத் தெரிவித்துள்ளார்.
ஊடகங்களின் கருத்துக் கணிப்புகள் பிரிட்டிஷ் வாக்காளர்கள் திரு சுனக் அல்லது திருவாட்டி மோர்டாண்ட் இருவரில் ஒருவரையே பிரதமராக ஏற்றுக்கொள்வார்கள். திரு ஜான்சனை மீண்டும் பதவியில் அமர்த்த விரும்ப மாட்டார்கள் என்று கூறுகின்றன.
திரு ஜான்சன் கட்சிக்குள் மீண்டும் ஒரு அரசியல் பூசலைத் தவிர்க்கும் நோக்கில் திரு சுனக்கிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று 'த சன்' நாளேடு தகவல் வெளியிட்டுள்ளது.
ஆனால் திரு சுனக்கின் ஆதரவாளர்கள் திரு ஜான்சன் இப்போட்டியில் களமிறங்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்வர் என்கிறது 'த டைம்ஸ்'.
ஆறு அமைச்சர்கள் மீண்டும் போரிஸ் ஜான்சன் பிரதமராவதற்கு ஆதரவு தருவர் என்று 'த மெயில்' குறிப்பிட்டுள்ளது.
திரு ஜான்சனின் அமைச்சரவையில் பிரெக்சிட் அமைச்சராக இருந்த திரு டேவிட் ஃப்ராஸ்ட் திரு சுனக்கை ஆதரிக்கிறார்.
முன்னாள் சுகாதார அமைச்சர் மட் ஹன்காக், திரு ஜான்சனும் திரு சுனக்கும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் திரு ஜான்சன் திரு சுனக்கை ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
நாடு எதிர்நோக்கும் பொருளியல் சிக்கலைச் சமாளிக்க திரு ரிஷி சுனக்கின் திறன்கள் கைகொடுக்கும் என்று சில அனுபவமிக்கவர்கள் கூறுகின்றனர்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைமைக்கும் அதன்வாயிலாக நாட்டின் பிரதமர் பதவிக்கும் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் உள்ளூர் நேரப்படி நாளைப் பிற்பகல் இரண்டு மணிக்குள் 100 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை நிரூபிக்க வேண்டும்.
வரும் வெள்ளிக்கிழமை பிரிட்டனின் புதிய பிரதமர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார். சென்ற வியாழக்கிழமை பிரதமர் லிஸ் டிரஸ் பதவி விலகியதையடுத்து அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்க நேரிட்டுள்ளது.

