'எக்ஸ்பிபி' கொவிட்-19 அலை குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யி காங்
'எக்ஸ்பிபி' கொவிட்-19 தொற்று அலை நவம்பர் நடுப்பகுதிக்கு முன்னரே உச்சத்தைத் தொடக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
செம்பவாங் குழுத்தொகுதியில் நேற்று நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த வாரத்திலிருந்து தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கிவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது," என்றார்.
தொற்று தொடர்ந்து குறைந்தால், 'எக்ஸ்பிபி' அலை எதிர்பார்க்கப்பட்டதைவிட முன்கூட்டியே உச்சம் தொட்டுவிட்டது என அர்த்தமாகும் என்று திரு ஓங் கூறினார்.
தற்போது சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு 'எக்ஸ்பிபி' வகை ஓமிக்ரான் துணைத் திரிபே காரணம் என்று சுகாதார அமைச்சு அக்டோபர் 15ஆம் தேதி தெரிவித்திருந்தது.
'எக்ஸ்பிபி' அலை நவம்பர் நடுப்பகுதிவாக்கில் உச்சம் தொடும் என தான் எதிர்பார்ப்பதாக அமைச்சு அப்போது கூறி இருந்தது.
புக்கிட் கேன்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவத்தில் உள்புற விளையாட்டு மண்டபத்தின் தொடக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் திரு ஓங் பேசினார்.
பொது மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருவது குறித்த மற்றொரு கேள்விக்கும் திரு ஓங் பதிலளித்தார். இவ்வாண்டு தொடக்கத்தில் இருந்தே அவசர சிகிச்சைப் பிரிவுகள் பரபரப்பாக இருந்து வருவதாகச் சொன்ன அவர், கொவிட்-19 அலை வீசும்போது நிலவரம் மோசமடைவதாகக் கூறினார்.
எனினும், அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க கொவிட்-19 நோயாளிகள் காரணமல்ல என்பதை திரு ஓங் தெளிவுபடுத்தினார்.
"அவசர சிகிச்சைப் பிரிவுகள் அதிகமான கொவிட்-19 நோயாளிகளைப் பார்க்கவில்லை. மாறாக, வழக்கமான நோயாளிகளையே அவை பார்க்கின்றன," என்றார் அவர்.
என்றாலும், தொற்று அலை வீசும்போதும் கொவிட்-19 நோயாளிகளால் கூடுதலான படுக்கைப் பிரிவுகள் நிரப்பப்படுகின்றன. இதனால் மற்ற நோயாளிகளுக்குப் படுக்கைகள் ஒதுக்கப்படுவது கடினமாவதாக திரு ஓங் குறிப்பிட்டார். அவசர சிகிச்சைப் பிரிவுகளில் நெருக்கடியைச் சமாளிக்கவும் நோயாளிகளைப் பராமரிக்க போதுமான வளங்களும் ஆள்பலமும் இருப்பதை உறுதிசெய்யவும் மருத்துவமனைகளுடன் சேர்ந்து சுகாதார அமைச்சு பணியாற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.
தற்போதைய தொற்று அலை ஓய்ந்த பிறகும், பாதுகாப்புக்காக மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு ஓங் வலியுறுத்தினார்.
மூத்தோர் இருவகை திறன் கொண்ட தடுப்பூசியை ஏன் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்தார். இருவகை திறன் உடைய தடுப்பூசிகள், தற்போது பரவிவரும் ஓமிக்ரான் துணைத் திரிபுகளுக்கு எதிராக அதிக செயல்திறனுடன் இருப்பதாக அவர் விளக்கினார். இதுவரை ஏறக்குறைய 20,000 பேர் இத்தகைய தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு உள்ளதாக அவர் தெரிவித்தார். சிங்கப்பூரில் அறிமுகம் கண்டு உள்ள முதலாவது இருவகை திறன் கொண்ட தடுப்பூசி, மொடர்னா/ஸ்பைக்வேக்ஸ் தடுப்பூசியாகும். அக்டோபர் 14ஆம் தேதியிலிருந்து ஒன்பது கூட்டுப் பரிசோதனை, தடுப்பூசி நிலையங்களில் இது போடப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனத்தின் இருவகை திறன் கொண்ட கொமிர்னாட்டி தடுப்பூசி தற்போது மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. ஆண்டு இறுதிக்குள் அது கிடைக்கக்கூடும்.

