பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்றார் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக்
பிரிட்டிஷ் மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தி, அதைக் கட்டியெழுப்பவும் நாட்டைப் பொருளியல் நெருக்கடியில் இருந்து மீட்கவும் அந்நாட்டின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்ற ரிஷி சுனக் உறுதியளித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டிஷ் பிரதமராகப் பதவியேற்று இருப்பது இதுவே முதன்முறை.
கடந்த 200 ஆண்டுகளில் பிரிட்டனின் ஆக இளைய பிரதமர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் 42 வயதான திரு சுனக்.
கடந்த இரண்டு மாதங்களில் அந்நாட்டின் மூன்றாவது பிரதமர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் அரசர் மூன்றாம் சார்ல்சை நேற்றுக் காலையில் சந்தித்தபின் பிரதமராகப் பொறுப்பேற்றுக்கொண்டார் திரு சுனக்.
அதன்பின் பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்திற்கு வெளியே பிரதமராக அவர் தமது முதல் உரையை ஆற்றினார்.
"நிலைமை எவ்வளவு சிக்கலானதாக இருக்கிறது என்பதை அறிந்துள்ளேன். மக்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய பணி எனக்குள்ளது என்பதையும் அறிந்திருக்கிறேன்.
"எதைக் கண்டும் நான் அச்சப்படவில்லை. நான் ஏற்றுக்கொண்ட உயர்ந்த பதவியின் எதிர்பார்ப்புகளுக்கேற்ப செயல்பட முடியும் என்று நம்புகிறேன்," என்று திரு சுனக் பேசினார்.
பொருளியல் நிலைத்தன்மைக்கும் நம்பிக்கைக்கும் தமது அரசாங்கம் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கும் எனக் குறிப்பிட்ட அவர், சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும் சொன்னார்.
அரசியலைக் காட்டிலும் பொதுமக்களின் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் உறுதிகூறினார்.
பணவீக்கமும் எரிசக்திக் கட்டணமும் உயர்ந்துவரும் நிலையில், இந்த நெருக்கடிகளில் இருந்து நாடு மீண்டெழ உதவாவிடில் தங்களின் பதவி நெருக்கடிக்கு உள்ளாகலாம் என்று தம்முடைய சக அமைச்சர்களுக்கும் திரு சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரிட்டனின் பணக்கார நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான திரு சுனக், சுகாதாரம், கல்வி, தற்காப்பு, நல்வாழ்வு, ஓய்வூதியம் போன்ற பல துறைகளில் செலவுகளை மறுஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
திரு சுனக்கிற்கு முன்னால் வெறும் 44 நாள்களே பிரதமராக இருந்த திருவாட்டி லிஸ் டிரஸ், பொருளியல் வளர்ச்சிக்கு மீண்டும் புத்துயிரூட்டத் திட்டமிட்டார்.
அவரது திட்டத்தில் தவறு இல்லை எனக் குறிப்பிட்ட புதிய பிரதமர் சுனக், ஆனாலும் சில பிழைகள் இழைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டார்.
அவற்றையெல்லாம் சரிசெய்யவே தாம் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராகவும் பிரிட்டிஷ் பிரதமராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
அடுத்ததாக, திரு சுனக் தமது அமைச்சரவையை அமைக்கவுள்ளார். இப்போதைய நிதியமைச்சர் ஜெரமி ஹன்ட் அப்பதவியில் நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

