மூலாதாரப் பணவீக்கம் 5.3%; 14 ஆண்டு உச்சம்

மூலாதாரப் பணவீக்கம் 5.3%; 14 ஆண்டு உச்சம்

2 mins read

உணவு, சேவை­க­ளுக்­கான செலவு தொடர்ந்து அதி­க­ரித்­து­வ­ரும் நிலை­யில், சிங்­கப்­பூ­ரில் மூலா­தா­ரப் பண­வீக்­கம், கடந்த மாதம் கிட்­டத்­தட்ட 14 ஆண்­டு­களில் இல்­லாத புதிய உச்­சத்தை எட்­டி­யது.

தனி­யார் போக்­கு­வ­ரத்து, தங்கு­மி­டச் செல­வு­களை உள்­ள­டக்­காத மூலா­தா­ரப் பண­வீக்­க­மா­னது, ஆண்டு அடிப்­ப­டை­யில் சென்ற மாதம் 5.3 விழுக்­கா­டாக உயர்ந்­தது. அதற்கு முந்­திய ஆகஸ்ட் மாதத்­தில் இது 5.1 விழுக்­கா­டாக இருந்­தது.

மூலா­தா­ரப் பண­வீக்­கம் 2008 நவம்­பர் மாதம் 5.5 விழுக்­காட்டை எட்­டி­யதே முந்­திய உச்­சம்.

அதே­போல, ஒட்­டு­மொத்­தப் பண­வீக்­கம் செப்­டம்­ப­ரில் 7.5 விழுக்­கா­டாக உயர்ந்­தது. இதற்கு முன் 2008 ஆகஸ்ட்­டி­லும் இதே அளவு பதி­வா­கி­யி­ருந்­தது.

சிங்­கப்­பூர் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் நேற்று இந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­களை வெளி­யிட்­டன.

"இவ்வாண்டுத் தொடக்கத்தில் உச்சத்தில் இருந்த எரிசக்தி, உணவுப்பொருள்களின் விலை குறையத் தொடங்கியுள்ளது. ஆனாலும், விநியோகத் தொடரில் பிரச்சினைகள் நீடிப்பதால் விலை அதிகமாகவே இருக்கும்," என்று அவை தெரிவித்துள்ளன.

சிங்­கப்­பூர் நாணய மதிப்பை வலு­வாக வைத்­தி­ருக்­க­வும் இறக்கு­ம­திப் பொருள்­க­ளின் விலை ஏற்­றத்­தால் ஏற்­ப­டக்­கூ­டிய பண வீக்­கத்­தைக் கட்­டுக்­குள் வைத்­து இ­ருக்­க­வும் ஏது­வாக, கடந்த 2021 அக்­டோ­ப­ரில் இருந்து நாணய ஆணை­யம் ஐந்து முறை தனது நாண­யக் கொள்­கை­யைக் கடு­மை­யாக்கி இருக்­கிறது.

உலகளவில் எரிசக்தி, உணவுப் பொருள்களின் விலை குறைந்துள்ள போதும் ஊழியர் சந்தையில் நிலவும் கடுமையான நிலையால் சம்பள நெருக்கடிகள் அதிகரித்துள்ளன என்று மேபேங்க் பொருளியல் வல்லுநர்களான சுவா ஹக் பின்னும் லீ யு ஜேயும் தெரிவித்தனர்.

"அடுத்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதியிலிருந்து உணவு சேவைகள், கழிவு மேலாண்மை, நிர்வாகிகள், ஓட்டுநர்கள் போன்ற தொழில்சார் துறைகளுக்கும் படிப்படியான சம்பள உயர்வு முறை விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இதனால் வரும் காலாண்டுகளில் சம்பளமும் உயரும். அதனால், விலையேற்றமும் இருக்கும்," என்பது அவர்களின் கருத்து.

உணவு சேவை­கள், சமைக்­கப்­படாத உண­வுப்­பொ­ருள்­களின் விலை தொடர்ந்து ஏறு­மு­க­மாக இருந்­த­தால் ஆண்டு அடிப்­ப­டை­யில் கடந்த ஆகஸ்ட்டில் 6.4 விழுக்­கா­டாக இருந்த உண­வுப் பண­வீக்­கம், செப்­டம்­ப­ரில் 6.9 விழுக்­கா­டாக அதி­க­ரித்­தது. அதே­போல, ஆகஸ்ட்­டில் 3.8 விழுக்­கா­டாக இருந்த சேவைப் பண­வீக்­க­மும் அதற்­க­டுத்த மாதத்­தில் 4 விழுக்­கா­டாக உயர்ந்­தது.

மூலா­தா­ரப் பண­வீக்­க­மா­னது அடுத்த சில காலாண்­டு­க­ளுக்­குத் தொடர்ந்து உய­ர­லாம் என்­றும் 2023 பிற்­பா­தி­யில் அது மெது­வ­டை­யும் என்­றும் எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

இவ்­வாண்டு முழு­மைக்­கு­மான ஒட்­டு­மொத்­தப் பண­வீக்­கம் சரா­சரி­யாக 6 விழுக்­காட்டை ஒட்டி இருக்­கும் என்­றும் மூலா­தா­ரப் பண­வீக்­கம் கிட்­டத்­தட்ட 4 விழுக்­காடாக இருக்­கும் என்­றும் நாணய ஆணை­ய­மும் வர்த்­தக, தொழில் அமைச்­சும் முன்­னு­ரைத்து இருக்­கின்­றன.

2023ஆம் ஆண்­டைப் பொறுத்த மட்­டில், ஒட்­டு­மொத்­தப் பண­வீக்­கம் 5.5 முதல் 6.5 விழுக்­காட்­டிற்கு இடை­யி­லும் மூலா­தா­ரப் பண­வீக்­கம் 3.5 முதல் 4.5 விழுக்­காட்­டிற்கு இடை­யி­லும் இருக்­கும் என்­றும் கணிக்­கப்­பட்­டுள்­ளது. அடுத்த ஆண்டு இடம்­பெ­ற­வுள்ள பொருள், சேவை வரி உயர்­வை­யும் இந்த முன்­னு­ரைப்­பு­கள் கணக்­கில் கொண்­டுள்­ளன.